கனிமொழி எம்.பி முகநூல்
தமிழ்நாடு

’கனிமொழி மேம் பி.ஏ யாருனே தெரியாது’-கோவையில் போலீசிடம் தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள் பகிரங்க மன்னிப்பு!

கோவை 100 அடி சாலையில் பணியில் இருந்த போக்குவரத்து காவலரிடம் தான் கனிமொழி எம்.பி. உதவியாளரின் சகோதரர் என கூறி தகராறில் ஈடுபட்ட மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

PT WEB, ஜெனிட்டா ரோஸ்லின்

கோவை 100 அடி சாலையில் பணியில் இருந்த போக்குவரத்து காவலரிடம் தான் கனிமொழி எம்.பி. உதவியாளரின் சகோதரர் என கூறி தகராறில் ஈடுபட்ட மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி கோவை 100 அடி சாலையில் இரவில் போக்குவரத்து காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது.. அந்தவழியாக வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தியுள்ளார் போக்குவரத்து தலைமை காவலர் தீபக்.

பின்னர் காரில் வந்த இளைஞர்களை கீழே இறங்கச்சொன்னதால், போக்குவரத்து போலீசாரிடம் தகராறு செய்த அந்த இளைஞர்களில் ஒருவர் அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதனால் போக்குவரத்து காவலர் தீபக், அந்த இளைஞரின் செல்போனை வாங்கி, தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆனால், அந்த இளைஞர் தான் திமுக எம்.பி கனிமொழி உதவியாளரின் சகோதரர் என்று கூறி, தன்னுடன் வந்த நண்பர்களையும் அங்கிருந்து அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து, இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

பின்னர், கனிமொழி எம்.பி.யின் உதவியாளரின் சகோதரர் என கூறிய இளைஞர்கள் யார் என்று போக்குவரத்து போலீஸார் விசாரணை நடத்தியதில், அந்த இளைஞர்கள் பொள்ளாச்சியை சேர்ந்த கிரண், சிவா, பாலாஜி என்று தெரியவந்ததுள்ளது.

இதைத்தொடர்ந்து, காட்டூர் காவல் நிலைய ஆய்வாளர் தவ்லத் நிஷா வழக்குப்பதிவு செய்து, பொள்ளாச்சிக்கு சென்று அம்மூவரையும் கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து, இவர்களிடம் தொடர் விசாரணை நடத்தியதில், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் உதவியாளர் யார் என்றே தங்களுக்கு தெரியாது என்று கூறி, பொது இடத்தில் இவ்வாறு நடந்து கொண்டதற்கு மன்னிப்பும் கேட்டுள்ளனர்.

இது குறித்தான வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது..

அதில் பேசிய இளைஞர் கிரண், “ என் பெயர் கிரண் . நானும் என்னுடைய நண்பர்களும் பொள்ளாச்சியிலிருந்து கோயம்பத்தூருக்கு ஒரு பர்சனல் வேலைக்காக வந்திருந்தோம்.. அதை முடித்துவிட்டு கோயம்புத்தூரிலிருந்து பொள்ளாச்சிக்கு செல்லும்போது , கோவை 100 அடி ரோட்டில், போலீஸ் சோதனை நடைப்பெற்றுக்கொண்டிருந்தது. அப்போது, மதுபோதையில் இருந்ததால் போலீஸாரிடம் தவறாக பேசிவிட்டேன்.

அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதுமட்டுமில்லாது பொது இடத்தில் கனிமொழி எம்பி மேம்மின் பெயரை பயன்படுத்தியது தவறுதான்.. அவரின் பிஏ யாரென்றே எனக்கு தெரியாது.. எனக்கும் அவருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

எனது நண்பர் ஒருவரிடத்தில் போன் செய்து கொடுத்துதான் (போலிஸாரிடத்தில்) பேச சொன்னேன் . அதற்கு மன்னிப்பு கேட்கிறேன். பொது இடத்தில் miss behave செய்ததற்கும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்..“ என்று மன்னிப்பு கேட்ட நிலையில், அவருடன் இருந்த இரண்டு நண்பர்களும் மன்னிப்பு கேட்டுள்ளனர்.

இதனை அடுத்து பணியில் இருந்த காவலரை பணி செய்யவிடாமல் தடுத்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து பின்னர் காவல் நிலைய பிணையில் மூவரும் விடுவிக்கப்பட்டனர்.