தமிழ்நாடு

கவனிக்கப்படுமா? கணிதமேதை ராமானுஜத்தின் ராயபுர அருங்காட்சியகம் 

கவனிக்கப்படுமா? கணிதமேதை ராமானுஜத்தின் ராயபுர அருங்காட்சியகம் 

webteam

ராயபுரத்திலுள்ள கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜத்தின் அருங்காட்சியகத்தை சிறப்பு மிக்க இடமாக அறிவிக்க வேண்டும் என்று ஒருவர் ட்விட்டரில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

கணிதமேதை ராமானுஜத்தை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் அவரது வாழ்க்கை வரலாற்றை படம்பிடித்து காட்டும் ராயபுர அருங்காட்சியகத்தை அந்தப் பகுதி மக்களே அறிந்திருக்க மாட்டார்கள், அதான் உண்மை. அவருக்கு ராயபுரத்தில் அருங்காட்சியகம் உள்ளதா? என ஆச்சரியப்படுபவர்களே அதிகம். அந்தளவுக்கு அதிகம் அறியப்படாத அந்த இடத்தை பற்றி ஆங்கில ‘தி இந்து’ பத்திரிகை ஒரு கட்டுரையை வெளியிட்டது. அதை படித்துவிட்டு போய் பார்த்த ஒருவர் தன் ஆதங்கத்தை அமைச்சருக்கு ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். 

சரி, முதலில் அந்த அருங்காட்சியகம் எங்கே உள்ளது எனப் பார்ப்போம்.

சென்னை ராயாபுரத்திலுள்ள சோமு செட்டி சாலையின் 4ஆவது லேனில் அமைந்துள்ளது ‘ஸ்ரீனிவாச ராமானுஜன்’ அருங்காட்சியகம். இந்த அருங்காட்சியகத்தில் ராமானுஜத்தில் இளமை பருவம் முதல் அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்றது வரை உள்ள அனைத்து நிகழ்வுகள் தொடர்பான பல சுவாரஸ்யமான புகைப்படங்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக அவர் எழுதியுள்ள கடிதங்கள், அவர் போட்ட சில கணக்குகள், அவர் படித்த புத்தகங்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. 

மேலும் இந்த அருங்காட்சியகத்தில் மெட்ராஸ் நகரிலிருந்து ராமானுஜத்திற்கு உதவியவர்கள் குறித்த கதைகள் பற்றிய விவரங்கள் உள்ளன. அத்துடன் ராமானுஜன் மிகவும் உணர்ச்சிப்பூர்வமான நபர் என்பதற்கு சான்றாக அவர் வாழ்வில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. அதாவது, “ராமானுஜன் கேம்பிரிட்ஜில் படித்து கொண்டிருந்த போது அவர் தனது நண்பர்களை தனது வீட்டிற்கு அழைத்து இரவு விருந்து அளித்துள்ளார். அப்போது அவர்கள் ராமானுஜத்தின் ரசத்தை குடித்து மற்ற உணவுகள் வேண்டாம் எனக் கூறியுள்ளனர். இதனையடுத்து அங்கிருந்து கோபத்தில் ராமானுஜன் வெளியேறியுள்ளார். 

அதன்பின்னர் நான்கு நாட்கள் கழித்து அவர் ஆக்ஸ்போர்டு பகுதியிலிருந்து கேம்பிரிட்ஜ் வர 5 பவுண்ட் வேண்டும் என்று ஒரு தந்தியை அனுப்பியுள்ளார். மீண்டும் கேம்பிர்ட்ஜ் திரும்பிய பிறகு அவர் தனது நண்பரிடம் என் வீட்டிற்கு வந்த விருந்தாளிகள் நான் செய்த உணவை சாப்பிட மாட்டேன் எனக் கூறியது எனக்கு மிகவும் வருத்தமளித்தது எனத் தெரிவித்துள்ளார். 

இது போன்று கணித மேதை ராமானுஜன் குறித்து அறியாத பல தகவல்கள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன. இந்நிலையில் இந்த அருங்காட்சியகத்தை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சென்று பார்த்திருக்கிறாரா என்று ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் அவர் இந்த அருங்காட்சியகத்தை சிறப்பு மிக்க இடமாக மாற்ற வேண்டும் என்று அவருக்கு கோரிக்கையையும் விடுத்துள்ளார். இதற்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், “நான் இந்த அருங்காட்சியகத்தை விரைவில் சென்று பார்ப்பேன்” எனப் பதிலளித்துள்ளார்.