பொன்முடி  PT WEP
தமிழ்நாடு

பேராசிரியர் To அமைச்சர் பதவி இழப்பு; அரசியலில் பொன்முடி கடந்து வந்த பாதை-வெற்றிகளும், சறுக்கல்களும்!

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோர் குற்றவாளி என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

விழுப்புரம் மாவட்டம், டி.எடையார் கிராமத்தில் கடந்த 1950-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி பிறந்தவர் பொன்முடி. இவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் திமுக மீது கொண்ட பற்றால் தி.மு.க. மாணவரணியில் இணைந்தார். விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். மாநில மாணவரணி துணைச்செயலாளராக இருந்த செஞ்சி ராமச்சந்திரன் மற்றும் தென்னாற்காடு மாவட்ட மாணவரணியின் முக்கியப் பிரமுகர் ஏ.ஜி.சம்பத் போன்ற தி.மு.கவின் முக்கியப் புள்ளிகளின் அறிமுகம் கிடைத்துள்ளது.

பின்னர் 1989 சட்டமன்றத் தேர்தலில், அப்போது விழுப்புரம் மாவட்டச் செயலாளராக இருந்த செஞ்சி ராமச்சந்திரன் பரிந்துரையின் பேரில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. அதற்காக தன்னுடைய அரசு வேலையையும் ராஜினாமா செய்துள்ளார் பொன்முடி. அந்தத் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர், அப்துல் லத்தீப்பை விட, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அப்போது பொன்முடிக்கு முதல்முறையே அமைச்சராகும் வாய்ப்பும் கிடைத்தது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றார். ஆனால் இது நீண்ட காலம் நீடிக்கவில்லை 1991 ஜனவரியில் தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டதால் அவர் 2 ஆண்டுகள் மட்டுமே அமைச்சர் பதவியில் நீடித்தார்.

அந்தக் காலகட்டத்தில் தி.மு.க.வுக்குள் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி வைத்திருந்தார் பொன்முடி. மீண்டும், 1991 தேர்தலில் அதே விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.

1996 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் விழுப்புரம் தொகுதியில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட, அதிமுகவின் பன்னீர்செல்வத்தைவிட 40 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அப்போது தி.மு.க அமைச்சரவையில், அவருக்குப் போக்குவரத்து, நெடுஞ்சாலை, பெருநகர வளர்ச்சி ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டன. கடந்த 1997ஆண்டு திமுகவின் கட்சியின் மாவட்டச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் 2001 ஆண்டு நடந்த தேர்தலில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட, பாமகவின் பசுபதியை தோல்வியடைய செய்து எம்.எல்.ஏ. வாக பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து, 2006 தேர்தலிலும் அதே விழுப்புரம் தொகுதியில் மீண்டும் பசுபதியை எதிர்த்து மாபெரும் வெற்றி பெற்ற பொன்முடி அப்போதைய தி.மு.க. அமைச்சரவையில் உயர்கல்வி மற்றும் கனிமவளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். பின்னர் கடந்த 2011 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சி.வி.சண்முகத்திடம் தோல்வியைத் தழுவினார்.

2016-ல் திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவான அவர் மீண்டும் 2020-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டார். கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் 2020 ஆண்டு வரை 23 ஆண்டுகள் விழுப்புரம் மாவட்ட திமுக செயலாளராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ.வான பொன்முடி உயர் கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். இது வரை ஆறுமுறை எம்.எல்.ஏ.வாகவும் பல்வேறு துறைகளுக்கு அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.

கடந்த 2006 -2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சிக் காலத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகக் கூறி பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

பின்னர் இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் 2016 ஆம் ஆண்டு, பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, அதிமுக ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேல் முறையீடு செய்தனர்.

மேல்முறையீட்டு மனு கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையிலிருந்து வந்த நிலையில், நேற்று முன் தினம் (டிச.19) பொன்முடி மற்றும் விசாலாட்சி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டது ரத்து செய்து அவர்கள் குற்றவாளிகள் என உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.

பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், அவர் குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், தண்டனை குறித்த விவரங்களை இன்று (டிச.21) அறிவிக்கும் எனத் தெரிவித்திருந்த நிலையில், இன்று அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தலா ரூ.50 லட்சம் அபதாரமும் விதிக்கப்பட்டுள்ளது.

பொன்முடி மனைவி விசாலாட்சி

அதே நேரம் அமைச்சர் பொன்முடியின் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகளுக்காக ஒரு மாதத்திற்குத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பனுக்கு பொன்முடி வகித்து வந்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொறுப்பு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பரிந்துரையை முதலமைச்சர் ஆளுநருக்கு வழங்கியுள்ளார்.