தமிழ்நாடு

ஆக்கிரமிப்புக்கு எதிரான நோட்டீஸ் செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம்

ஆக்கிரமிப்புக்கு எதிரான நோட்டீஸ் செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம்

webteam

சென்னை அடையாறு பகுதியில் கல்வி நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை காலி செய்யும்படி மாநகராட்சி அனுப்பிய நோட்டீஸ் செல்லும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அடையாறு கெனால் பேங்க் சாலையில் இயங்கி வரும், செயின்ட் பேட்ரிக் கல்வி நிறுவனம், மாநகராட்சிக்கு சொந்தமான, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான 5.20 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்திருந்தாக புகார் எழுந்தது.  இந்த நிலத்திற்கு பட்டா வழங்கக் கோரி கல்வி நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, ஆக்கிரமிப்பு நிலத்தை ஏழு நாட்களில் காலி செய்யும்படி, மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். 

இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி விஜயகம்லேஷ் தஹில் ரமானி மற்றும் நீதிபதி துரைசாமி அடங்கிய அமர்வு, “பட்டா கோரி மனுதாரர் அளித்த மனு நிராகரிக்கப்பட்டு, அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. நிலத்தை மாநகராட்சி எடுத்துள்ள நிலையில், மாநகராட்சி துணை ஆணையர் பிறப்பித்த நோட்டீஸ் சட்டப்படி செல்லும்” என தெரிவித்தது. மேலும், அந்த நோட்டீசில் தலையிட எந்த காரணமும் இல்லை எனவும் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.