தமிழ்நாடு

நீதிமன்ற வளாகத்திற்குள் குற்றவாளியை தாக்கிய போலீஸ்: நீதிபதி கண்டிப்பு

நீதிமன்ற வளாகத்திற்குள் குற்றவாளியை தாக்கிய போலீஸ்: நீதிபதி கண்டிப்பு

webteam

திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்குள் கையெழுத்திட வந்த குற்றவாளி ஒருவரை போலீசார் அடித்து இழுத்துச் சென்றதை நீதிபதிகள் கண்டித்துள்ளனர். 

திருவாரூர் மாவட்டம் ராதாநஞ்சை கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் மகன் ராஜேஷ்(20). இவர் மீது மது விற்பனை தொடர்பாக வழக்கு நடைபெற்று வருகிறது. ஆகவே நீதிமன்ற உத்தரவின் பேரில் திருவாரூரில் உள்ள தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களாக கையெழுத்திட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று நீதிமன்றத்திற்கு கையெழுத்திட வந்த ராஜேசை பின்தொடர்ந்து வந்த திருவாரூர் தாலுகா காவல்துறையினர் சட்டையை பிடித்து அடித்து இழுத்து சென்றனர். நீதிமன்ற வளாகத்திற்குள் இதுபோன்று அடித்து இழுத்துச் செல்வதைக் கண்ட வழக்கறிஞர்களும் அங்கிருந்த பொதுமக்களும் போலீசாரை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

இச்சம்பவம் குறித்து அறிந்த திருவாரூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராஜேந்திரன், உடனடியாக போலீசாரை வரவழைத்து நீதிமன்றத்திற்குள் குற்றவாளிகளை அடித்து இழுத்துச் சென்றது தவறு. இதற்கு யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது எனக் கடுமையாக கண்டித்தார். மேலும் மனித உரிமை மீறல் தொடர்பாக நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் எனவும் எச்சரித்தனர். 

உடனே போலீசார் நீதிபதியிடம் மன்னிப்பு கோரினர். அதனைத் தொடர்ந்து ராஜேஷ் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் அவரை வேறொரு புகாரில் கைது செய்திருப்பதாக போலீசார் அறிவித்துள்ளனர். இச்சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.