கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய விவகாரம் PT
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சியில் மீண்டும் தலைதூக்கும் கள்ளச்சாராய விற்பனை! இருவர் கைது!

கள்ளச்சாராயம் குடித்ததால், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அடுத்தடுத்து 69 பேர் உயிரிழந்த வேதனை மறையும் முன்பு, மீண்டும் அதே பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் கள்ளச்சாராயம் குடித்ததால், கருணாபுரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த 69 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த பெருந்துயரம், தமிழ்நாட்டை மட்டுமின்றி, இந்தியாவையே உலுக்கியது.

இதைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சியில் காவல்துறையின் மதுவிலக்கு தனிப்பிரிவினர் தீவிர சாராயத்தடுப்பு வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் தற்போது, கல்வராயன் மலையில் மீண்டும் கள்ளச்சாராயம் காய்ச்சுவதும் விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது.

2 பேர் கைது..

சாராயத்தடுப்பு வேட்டையில் ஈடுபட்ட மதுவிலக்கு தனிப்பிரிவினர், கல்வராயன்மலையில் சாராய ஊறல்களை கண்டுபிடித்து அழித்தனர். தும்பரம்பட்டு - வெள்ளரிக்காடு ஆகிய கிராமங்களில் நடத்திய சோதனையில், லாரி ட்யூப் மற்றும் பிளாஸ்டிக் பாக்கெட்களில் 60 லிட்டர் கள்ளச்சாராயத்தை கண்டுபிடித்தனர்.

மேலும், 100 லிட்டர் சாராய ஊறலையும் கண்டுபிடித்தனர். இவற்றை தரையில் கொட்டி அழித்த காவல்துறையினர், இதில் தொடர்புடைய சின்னையன் - சாமிதுரை என்ற 2 பேரை கைது செய்தனர்.