பாறைக்கடியில் சிக்கி 10 மணி நேர முயற்சிக்குப் பின் மீட்கப்பட்ட ஓட்டுநர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே தனியார் குவாரியில் ராட்சத பாறைகளை உடைக்கும் பணி நடந்து வருகிறது. இங்கு, நேற்று பெரிய பாறை ஒன்று திடீரென்று சரிந்து பொக்லைன் இயந்திரம் மீது விழுந்தது. அதில், பொக்லைன் ஓட்டுநர் பிஜு, பாறைக்கிடையில் சிக்கிக்கொண்டார். உயிருக்கு போராடிய அவரை மீட்கும் பணியில் குலசேகரம் தீயணைப்பு வீரர்களும், பொதுமக்களும் ஈடுபட்டனர்.
விபத்து குறித்து அறிந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டார். 10 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு, பிஜு மீட்கப்பட்டார். அவருக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்தார். 10 மணி நேரமாக சிக்கியிருந்த ஓட்டுநர் பத்திரமாக மீட்டும் பலன் கிடைக்காமல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.