இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த அம்பேத்கரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அவரை நினைவுகூறும் விதமாக பூ.கோ.சரவணன் தனது பேஸ்புக் பக்கத்தில் அம்பேத்கர் குறித்து பதிவிட்டுள்ளார். அதில் ''இந்தியாவின் வரலாற்றில் தனியிடம் பிடித்த இணையற்ற தலைவர் அம்பேத்கர். 'ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மட்டுமே போராடினார் அவர்!' என்கிற பொதுப் புத்தியில் பலர் இருப்பது வருத்தத்துக்குரியது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ''அம்பேத்கர், குடும்பத்தின் பதினான்காவது பிள்ளையாக, தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்து கல்வியின் வெளிச்சம், சமத்துவத்தின் மீதான நம்பிக்கை, உரையாடலுக்கான ஜனநாயக பண்பு ஆகியவற்றின் மூலம், இந்திய சமூக வரலாற்றில் மிகத் தனித்துவமான ஒரு இடத்தைப் பெற்றார். பரோடா மன்னரின் நிதி தீர்ந்த நிலையில், மன்னரின் அவையில் வேலை பார்க்க வந்தார். அங்கே அவரின் கல்வியோ, தகுதியோ சுற்றியிருந்த யாரின் கண்ணுக்கும் தெரியவில்லை. அவர் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர் என்று சொல்லி அவரைத் தொடக்கூட மறுத்தார்கள். தங்க இடம் கிடைக்காமல், அருந்த நீர் கூடக் கிடைக்காமல் அவர் அவமானங்களை சந்தித்தார்.
லண்டனில் போய் ஆய்வுப்படிப்பை முடித்து பார்-அட் -லா பட்டம் பெற்ற பின்னர் இந்தியா திரும்பினார். பம்பாயில் மாணவர்களுக்குப் பாடம் எடுத்தும், பம்பாய் சட்டக் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றிய அம்பேத்கர், சட்டப்பயிற்சியில் நல்ல வருமானம் ஈட்டியும், சொகுசான வாழ்க்கையை விரும்பாமல் தன்னைப் போன்ற சக சகோதரர்களின் கண்ணீரைத் துடைக்க, தன்மான உணர்வைத் தர அரசியல் களம் புகுந்தார். சாதிகள் எப்படித் தோன்றின , சாதியம் எப்படி சக மனிதனை சமமானவனாகக் கருதாத துயர் மிகுந்த போக்கை வளர்த்தது என்பதைப்பற்றி அவர் செய்த ஆய்வு, அதைத்தொடர்ந்து எழுதிய நூல்கள் எல்லாமும் அசாத்தியமானவை.
இந்தியாவின் ரிசர்வ் வங்கி உருவானது அண்ணலின் வழிகாட்டுதலில்தான். லண்டன் ஸ்கூல் ஆப் எகானமிக்ஸ்-ல் தன்னுடைய பொருளாதார ஆய்வுப்பட்டத்தைப் பெற்றார். உலகப் போர் மற்றும் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால், ஒரு தனி வங்கியை இந்தியாவுக்கு என்று துவங்க வேண்டும் என ஆங்கிலேய அரசு யோசித்து, அதற்கான 'ஹில்டன் எங்' குழுவை அமைத்தது.
அக்குழுவின் உறுப்பினர்கள் எல்லோரது கையிலும் இருந்த நூல் அண்ணல் அம்பேத்கர் எழுதிய 'The Problem of the Rupee– It’s origin and it’s solution எனும் நூல். அதன் வழிக்காட்டுதலில் ரிசர்வ் வங்கி உருவானது .கல்வி, அதிகாரம், அரசியல் செயல்பாடு, மத மாற்றம் என்று சமத்துவத்தை நோக்கி இந்தியச் சமூகத்தைச் செலுத்தியவர் அவர்”என்று பதிவிட்டுள்ளார்.