தமிழ்நாடு

“நெகிழி உற்பத்தியாளர்களை துன்புறுத்தாதீங்க” - உயர்நீதிமன்றம் அறிவுரை

“நெகிழி உற்பத்தியாளர்களை துன்புறுத்தாதீங்க” - உயர்நீதிமன்றம் அறிவுரை

webteam

நெகிழி பொருட்களைத் தடை செய்யும் அரசாணைக்கு தற்போதைய நிலையில் தடை விதிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கின் மீதான இறுதி விசாரணையை ஜனவரி 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் 14 வகையான நெகிழி பொருட்களுக்கு தடை விதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அந்த அரசாணையை எதிர்த்து நெகிழி உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகர்கள் வழக்குகள் தொடர்ந்தனர். தடை செய்யப்பட்ட நெகிழிகளை உற்பத்தி மற்றும் விற்பனை செய்யாத நிலையிலும் அரசு அதிகாரிகள் நடவடிக்கை என்ற பெயரில் துன்புறுத்துவதாக குற்றம்சாட்டினர்.  

இதுதொடர்பான வழக்குகள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசாணைக்கு தற்போதைய நிலையில் தடை விதிக்க மறுத்து விட்டனர். அரசாணையை முழுமையாக அமல்படுத்தலாம் என்றும், எனினும் அரசு தடைவிதித்துள்ள 14 பொருட்களை தவிர பிற பொருட்களின் உற்பத்தியாளர்களையோ, வணிகர்களையோ துன்புறுத்தக்கூடாது எனவும் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளனர். மேலும், நெகிழி உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகர்கள் தொடர்ந்த அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைப்பதாக தெரிவித்த நீதிபதிகள், அவற்றின் இறுதி விசாரணையை ஜனவரி 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.