தமிழ்நாடு

பசுமை தீர்ப்பாயத்தின் உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமனத்திற்கு இடைக்காலத்தடை!

பசுமை தீர்ப்பாயத்தின் உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமனத்திற்கு இடைக்காலத்தடை!

JustinDurai

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "மத்திய அமைச்சரவையின் பணி நியமனக் குழு கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி, தமிழகத்தின் தலைமைச் செயலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட 3 பேரை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்ய ஒப்புதல் அளித்திருந்தது. தேசிய பசுமைத் தீர்ப்பாய சட்ட பிரிவின்படி நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்யப்படக் கூடிய நபருக்கு 15 ஆண்டுகள் இந்திய ஆட்சிப்பணி அனுபவமும், அதில் 5 ஆண்டுகள் சுற்றுச்சூழல் சார்ந்த துறையில் பணியாற்றிய அனுபவமும் இருக்க வேண்டும்.

கிரிஜா வைத்தியநாதனுக்கு 15 ஆண்டுகளுக்கு மேல் இந்திய ஆட்சிப்பணி அனுபவம் இருந்தாலும், 5 ஆண்டுகளுக்கு சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளின் அனுபவம் இல்லை. அவர் 3 ஆண்டுகள் 6 மாத காலம் மட்டுமே சுற்றுச்சூழல் துறையில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டுள்ளார். எனவே அவரது நியமனம் தேசிய பசுமைத் தீர்ப்பாய விதிகளுக்கு எதிரானது. இதனைக் கருத்தில் கொண்டு அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்" எனக் கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம் செய்யப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  வரும் 19-ம் தேதி கிரிஜா வைத்தியநாதன் பதவியேற்கவிருந்த நிலையில் உறுப்பினர் நியமனத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.