தமிழ்நாடு

ராசிபுரம் குழந்தைகள் கடத்தல் சம்பவம் : ஆடியோ தொடர்பாக பீலா ராஜேஷ் உத்தரவு

webteam

ராசிபுரம் பகுதியில் ஓய்வுப் பெற்ற செவிலியர் அமுதா என்பவர் பிறப்பு சான்றிதழுடன் பச்சிளம் குழந்தைகளை விற்கும் சம்பவம் தொடர்பாக சுகாதார துறை செயலார் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் செவிலியர் அமுதா. விருப்ப ஓய்வுப் பெற்ற இவர், கடந்த 30 வருடங்களாக குழந்தைகளை வாங்கவும் விற்கவும் இடைத்தரகராக செயல்பட்டு வந்ததாகவும், இந்த குழந்தை விற்பனை தங்கு தடையின்றி நடந்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். இந்தச் சூழலில் தரகராக செயல்படும் செவிலியர் அமுதா ஒரு தம்பதிகளிடம் பேசிய ஆடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில்  “30 ஆயிரம் ரூபாய் கொடுத்து குழந்தையை முன்பதிவு செய்து கொண்டு குழந்தை வந்ததும் நேரில் பார்த்து எடுத்துக்கொள்ளலாம்” என அந்த பெண் கூறியிருந்தார்.இந்த ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் குழந்தை விற்பனை செய்யும் இந்த கும்பல் பல இடங்களில், குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்தும் குழந்தைகளை திருடி வந்து விற்று வருவதாக சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் ராசிபுரம் குழந்தைகள் கடத்தல் தொடர்பான விவகாரத்தில் முதல் கட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதார துறை செயலார் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறுகையில், குழந்தைகள் கடத்தல் தொடர்பான ஆடியோ விவகாரம் கவனத்திற்கு வந்துள்ளது. இதனால் முதல் கட்ட விசாரணையை மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், விசாரணை இறுதியில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.