Thirumavalavan PT
தமிழ்நாடு

“திமுக கூட்டணியில் 3 தனி தொகுதி, ஒரு பொது தொகுதி கேட்டிருக்கிறோம்” – விசிக தலைவர் திருமாவளவன்

திமுக கூட்டணியில் மொத்தமாக மூன்று தனி தொகுதி மற்றும் ஒரு பொது தொகுதி கேட்டிருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

webteam

செய்தியாளர்: ராஜ்குமார்

நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை குழு உடன் அரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். திமுக குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, திருச்சி சிவா உள்ளிட்டோர் இருந்தனர்.

Thirumavalavan

அதேபோல் விசிக தரப்பில் தலைவர் திருமாவளவன், பொதுச் செயலாளர் ரவிக்குமார், சிந்தனை செல்வன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுர் ஷாநவாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “விடுதலை சிறுத்தைகள் கட்சி நான்கு தொகுதிகளில் போட்டியிட பேச்சுவார்த்தை குழுவிடம் பேசப்பட்டு இருக்கிறது. இதில், சிதம்பரம், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு தனி தொகுதிகளை குறிப்பிட்டு அதில் மூன்று தொகுதிகள் வேண்டும் என்றும் பெரம்பலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகிய பொதுத் தொகுதிகளில் ஏதேனும் ஒன்று வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.

governor rn ravi

அகில இந்திய அளவில் பாரதிய ஜனதா கட்சியை, ஆட்சி அதிகாரத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை செயல் திட்டத்துடன் இந்தியா கூட்டணி இயங்கி வருகிறது. இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் தொகுதிகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். மேலும் தனி சின்னத்தில் போட்டியிட இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து பேசிய அவர், “இன்றைக்கு சட்டப் பேரவையில் ஆளுநர் நடந்து கொண்ட முறை வேதனை அளிக்கிறது. மாநில அரசிற்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற முன் சிந்தனையோடு ஆளுநர் வந்துள்ளார். ஆர்.என்.ரவி தமிழ்நாட்டில் ஆளுநராக செயல்படவில்லை. ஆர்.எஸ்.எஸ் தொண்டராக செயல்பட்டு வருகிறார். எனவே அவர் ஆளுநர் பதவியில் நீடிக்கக் கூடாது. அவரை நீக்குவதற்கு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது” என்றார்.