தமிழ்நாடு

புற்றுநோய் கட்டியை அகற்றி இராஜாஜி அரசு மருத்துவமனை சாதனை

புற்றுநோய் கட்டியை அகற்றி இராஜாஜி அரசு மருத்துவமனை சாதனை

webteam

மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் நவீன தொழில்நுட்ப உதவியுடன் மூளையில் இருந்த புற்றுநோய் கட்டியை அரசு மருத்துவர்கள் அகற்றி சாதனைப் புரிந்துள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த வனராஜா என்ற 63 வயது முதியவருக்கு மூளையில் கட்டி ஏற்பட்டதால், அவரது செயல்பாடுகள் நாளுக்கு நாள் மாற்றம் ஏற்பட்டதுடன் சுயநினைவை இழந்தும், கை, கால்கள் செயல்படாமல் வீட்டில் படுத்தப் படுக்கையாக இருந்துள்ளார்.  பரிசோதனைக்குப் பிறகு அது புற்றுநோய் கட்டி எனத் தெரிய வந்துள்ளது. இவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது 5 முதல் 7 லட்சம் வரை செலவு ஆகும் என மருத்துவர்கள் கூறி உள்ளனர். ஏழ்மை காரணமாக அவ்வளவு பணம் தந்து அறுவைச் சிகிச்சை செய்யமுடியாததால் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையின் அதிநவீன பல்நோக்கு பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த அரசு மருத்துவர்கள் பரிசோதனைக்குப் பின் இந்தியாவிலேயே உயரிய நவீன தொழில்நுட்பமான எப்.எல் 560 என்ற முறை மூலம் 10 மணி நேரம் அறுவைச் சிகிச்சை செய்து புற்றுநோய் கட்டியை அகற்றி உள்ளனர். தற்போது அந்த முதியவர் வனராஜா சுயநினைவு திரும்பியதுடன் கை,கால் செயலாற்ற தொடங்கி நலமுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் நாகல் நகரைச் சேர்ந்த சக்திவேல் என்ற இளைஞருக்கு, 33 ஆண்டுகளாக தலையிலிருந்த 5 கிலோ எடை கொண்ட கட்டியை 10 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின் அகற்றி, மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை மூலை நரப்பியல்துறை மருத்தவர்கள் குழு சாதனைப் படைத்துள்ளது. தென்தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளை மிஞ்சும் வகையில் இது போன்ற அறுவைச் சிகிச்சைகளை இலவசமாக செய்து இராஜாஜி அரசு மருத்தவமனை தொடர்ந்து பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது.