திமுக மற்றும் தோழமை கட்சிகளின் பேரணிக்கு அனுமதி மறுப்பு என அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நாளை பிரமாண்ட பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பேரணிக்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிம்னறத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை இந்திய மக்கள் மன்றம் என்ற அமைப்பின் தலைவர் வாராகி என்பவர் தாக்கல் செய்துள்ளார். பொதுச்சொத்திற்கு சேதம், அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்பதால் பேரணிக்கு அனுமதி தரக்கூடாது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக மற்றும் தோழமை கட்சிகளின் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் நாராயணன் தகவல் தெரிவித்தார். உருவபொம்மை எரிப்பு, சட்ட நகல் எரிப்பு செய்ய மாட்டோம் என திமுக உத்திரவாதம் தரவில்லை என வாதிடப்பட்டது. மனுதாக்கல் செய்த பிறகு திமுக பேரணிக்கு அனுமதி மறுப்பா அல்லது அதற்கு முன்பா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மனுவில் உள்துறை செயலாளர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.