தமிழ்நாடு

20 ஆம் தேதி முதல் பதிவுத்துறை அலுவலகம் செயல்பட உத்தரவு

20 ஆம் தேதி முதல் பதிவுத்துறை அலுவலகம் செயல்பட உத்தரவு

webteam
தமிழகம் முழுவதும் வரும் 20 ஆம் தேதி முதல் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுப்பணிகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் பணிகளைத் தொடங்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக பதிவுத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் சுற்றறிக்கையில் கொரோனா பெருந்தொற்று நோய் பரவுவதைத் தடுப்பதற்கான தெளிவான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் பதிவுத்துறை அலுவலக நுழைவாயிலில் பொதுமக்கள் கைகளைக் கழுவ ஏதுவாக சோப்பு, தண்ணீரை வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கைகளைச் சுத்தம் செய்த பிறகே பொதுமக்களை அலுவலகத்திற்குள் அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர கட்டாயம் தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில், பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்பட வேண்டும் என்றும் ஆணையிடப்பட்டுள்ளது. அனைத்து பணியாளர்களும் முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்து பதிவுப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், பொதுமக்களும் முகக்கவசம் அணிந்து அலுவலகத்திற்கு வர அறிவுறுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
போதிய நேர இடைவெளியில் பாதுகாப்பாக பதிவுப்பணிகளை மேற்கொள்ள ஏதுவாக ஒரு மணி நேரத்திற்கு 4 டோக்கன்கள் வீதம் ஒரு நாளைக்கு 24 டோக்கன்கள் என மென்பொருள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்றும், மாலை 5 மணி வரை டோக்கன் பெறும் நேரம் எனவும் மாற்றப்பட்டிருப்பதால், அதைக் கருத்தில் கொண்டு செயல்படச் சார்பதிவாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.