தமிழ்நாடு

ஓட்டுனர் இன்றி தானாக ஓடிய அரசு பேருந்து: அலறி அடித்து ஓடிய பொதுமக்கள் - காரணம் என்ன?

ஓட்டுனர் இன்றி தானாக ஓடிய அரசு பேருந்து: அலறி அடித்து ஓடிய பொதுமக்கள் - காரணம் என்ன?

webteam

மயிலாடுதுறையில் அரசு பேருந்து ஓட்டுநர் இல்லாமல் திடீரென ஓடி மதில் சுவரில் மோதி விபத்து. பேருந்தில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் அரசு பேருந்து இன்று காலை மணல்மேட்டில் இருந்து மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்திற்கு வந்தடைந்தது. இதையடுத்து பயணிகள் இறங்கிச் சென்ற பின்பு ஓட்டுநர், பேருந்தின் இன்ஜினை அணைக்காமல், நியூட்ரலில் வைத்து நிறுத்திவிட்டு கீழே இறங்கிச் சென்றுள்ளார்.

அப்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென பேருந்து தானாக இயங்கத் துவங்கியது. இதனை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர், மேலும், பேருந்து நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் இருந்து பேருந்து 50 மீட்டர் தொலைவிற்கு நகர்ந்து எதிரே இருந்த சுவரில் மோதி நின்றது. இதில் சுவர் மற்றும் அதிலிருந்த இரும்பு கிரில்கள் சேதமடைந்தன.

பேருந்து தானாக இயங்கத் துவங்கியதும் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் நகர்ந்து சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் பேருந்தின் உள்ளே யாரும் இல்லாத காரணத்தால் நல்வாய்ப்பாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வரும் நிலையில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் பேருந்தை மீட்டு அரசு பணிமனைக்கு எடுத்துச் சென்றனர்.