தமிழ்நாடு

பணி நேரம் முடிந்ததால் சரக்கு ரயிலை பாதியிலேயே நிறுத்திய ஓட்டுனர்

webteam

நாகை மாவட்டம் சீர்காழியில் பணி நேரம் முடிந்துவிட்டதாக ஓட்டுனர் ஒருவர் சரக்கு ரயிலை பாதியிலேயே நிறுத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இந்தியன் ரயில்வேயில் நிலக்கரி ஏற்றிச்சென்ற சரக்கு ரயில் காரைக்கால் துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தது. நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் வந்ததும் ரயில் ஓட்டுனர் முத்துராஜா, பணி நேரம் முடிந்துவிட்டதாகக் கூறி திடீரென ரயிலை பாதியிலேயே நிறுத்தினார். 

பணி நேரத்திற்கு மேல் 15 நிமிடங்கள் அதிகமாகவே பணியாற்றியதாகவும், அதற்குமேல் ரயிலை இயக்கமுடியாது எனவும் அலட்சியமாக பதிலளித்தார் அந்த ரயில் ஓட்டுனர். நிறுத்தப்பட்ட சரக்கு ரயில், புங்கனூர் சாலை வரை நீண்டிருந்ததால், அங்கிருந்த ரயில்வே கேட்டை திறக்க முடியவில்லை. அவ்வழியாக வாகனங்கள் செல்லமுடியாமல் வாகன ஓட்டிகள் தவித்தனர். 

மயிலாடுதுறை வரை ரயிலை இயக்குமாறு ரயில்வே நிர்வாகத்தினர் கேட்டும் முத்துராஜா மறுத்துவிட்டார். இதனிடையே அப்பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் இரண்டு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு மயிலாடுதுறை வரை ரயிலை இயக்க ஒப்புக்கொண்டார் அவர். ரயில் ஓட்டுனரின் இந்த அலட்சியத்தால் அவ்வழியாக செல்லும் ஒருசில ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டு, காலதாமதமாக இயக்கப்பட்டன.