தமிழ்நாடு

ரூபிக் க்யூப் மூலம் டிரையத்லான் சாம்பியன் வினோலி ராமலிங்கத்தின் உருவத்தை உருவாக்கிய சிறுமி

ரூபிக் க்யூப் மூலம் டிரையத்லான் சாம்பியன் வினோலி ராமலிங்கத்தின் உருவத்தை உருவாக்கிய சிறுமி

kaleelrahman

அம்பத்தூரை சேர்ந்த 8 வயது சிறுமி 955 ரூபிக் கியூப் வைத்து, டிரையத்லான் உலக சாம்பியன் வினோலி ராமலிங்கத்தின் உருவத்தை 8 மணி நேரத்தில் உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

அம்பத்தூர் வரதராஜபுரம் வெங்கடராமலு தெருவை சேர்ந்த சுபாஸ்சந்திர போஸ் - மீனாட்சி தம்பதியினரின் மகள் பிரிஷா. இவர், அண்ணாநகரில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயதில் இருந்தே நல்ல அறிவுக்கூர்மையும், நினைவாற்றலுடன் வளர்ந்து வரும் தனது மகளை பார்த்த சுபாஸ்சந்திர போஸ் - மீனாட்சி தம்பதியினர், அவரின் புத்திக்கூர்மையை மெருகேற்றி அதை வெளி உலகிற்கு கொண்டு வர விரும்பினார்கள்.

இதையடுத்து அவரை கடந்த 2019-ஆம் ஆண்டு அண்ணாநகரில் உள்ள தமிழ்நாடு கியூப் அசோசியேசனில் சேர்த்து, ரூபிக் கியூப் என்ற அறிவு சார்ந்த விளையாட்டை கற்றுக்கொள்ள வழிவகை செய்தனர். அங்கு தொடர்ந்து பயிற்சி பெற்றுவரும் அந்த சிறுமி தனது புத்திக்கூர்மையால் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக, பெண் சாதனையாளரான டிரையத்லான் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற வினோலி ராமலிங்கத்தின் உருவப்படத்தை ரூபிக் கியூப் மூலம் உருவாக்கி சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை நிகழ்ச்சி தமிழ்நாடு கியூப் அசோசியேசனில் நடைபெற்றது. காலை 8 மணியளவில் சிறுமி பிரிஷா அங்கு தனது சாதனையை தொடங்கினார். ரூபிக் கியூப் மூலம் 8 மணி நேரம் தொடர்ந்து முயன்று, சாதனையாளரான வினோலி ராமலிங்கத்தின் உருவப்படத்தை உருவாக்கினார்.

இந்த சாதனை நிகழ்ச்சியில் வினோலி ராமலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறுமியை வெகுவாக பாராட்டினர்.