திருச்சி சர்வதேச விமான நிலையத்தைத் தரம் உயர்த்தி புதிய முனையத்தைக் கட்ட இந்திய விமான நிலைய ஆணைய குழுமம் ரூ.951 கோடி ஒதுக்கீடு செய்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு அதற்கான கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், கூடுதலாக ரூ.249 கோடி செலவு செய்து ரூ.1200 கோடியில் கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
இந்தநிலையில், பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதனையடுத்து பல்வேறு புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டியுள்ளார். இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவிற்கு, நாகப்பட்டினம் கடற்கரை காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருபவர் விஜயசேகரன். என்பவர் தன்னுடைய இரண்டு வயது மகளான மதிவதனி துவாரகாவுடன், திருச்சிக்கு வருகை தந்த பிரதமர் மோடியைப் பார்ப்பதற்காக வந்துள்ளார்.
அப்போது அந்த சிறுமி கையில் பதாகையுடன் வந்துள்ளார். அந்த பதாகையில், "எங்கள் ஊர் நாகப்பட்டினம், இங்கு அரசு நடத்தும் பள்ளிக்கூடத்தில் ஹிந்தி படிக்க முடியவில்லை. ஹிந்தியுடன் கூடிய பள்ளிக்கூடம் கட்டுவதற்கு என் அப்பாவிடம் இடம் தரச் சொல்லுகிறேன். நீங்கள் பள்ளிக்கூடம் கட்டி தாங்க அதுல நாங்கள் ஹிந்தி கத்துக்கணும் ஜெய் ஹிந்த்" என்ற வசனத்துடன் பதாகை ஏந்தியபடி நின்று கொண்டிருந்த சிறுமியைப் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.