தமிழ்நாடு

புள்ளிமானை வேட்டையாடியவர் கைது

புள்ளிமானை வேட்டையாடியவர் கைது

webteam

தருமபுரி அருகே நாட்டு துப்பாக்கியால் புள்ளிமானை சுட்டு வேட்டையாடியவரை வனத்துறையினர் கைது செய்து புள்ளிமானை பறிமுதல் செய்துள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் இரவு நேரங்களில் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக மாவட்ட வன அலுவலர் ராஜ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மொரப்பூர் வனப்பகுதிகளில் வனச்சரக அலுவலர் கிருஷ்ணன் தலைமையில், கோவிந்தராசன், வேடியப்பன் உள்ளிட்ட வனத்துறையினர் ரோந்துப் பணியில் மேற்கொண்டு இருந்தனர்.

அதிகாலை 5:30 மணிக்கு, மொரப்பூர் பொம்மிடி அடுத்த, பில்பருத்தி காப்புக்காடு, வாசிக்கவுண்டனுார் பச்சையம்மன் கோவில் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டு இருசக்கர வாகனங்களில் கள்ளத்துப்பாக்கி மற்றும் மூட்டையை எடுத்துக் கொண்டு வந்த ஐந்து பேரை வனத்துறையினர், தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர்கள் நிற்காமல் சென்றனர். இதனையடுத்து அவர்களை துரத்திச் சென்ற வனத்துறையினர் ஒருவரை பிடித்தனர்.மேலும் நான்கு பேர் தப்பியோடி விட்டனர். 

இதனைதொடர்ந்து பிடிபட்டவரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர், சேலம் மாவட்டம், ஏற்காடு அடுத்த கே.புத்தூரை சேர்ந்த மகேந்திரன்(36) என்பது தெரிய வந்தது. மேலும் அவரிடமிருந்த நடத்திய விசாரணையில் கள்ளத்துப்பாக்கி மூலம் புள்ளிமானை வேட்டையாடியது தெரியவந்தது.
 
இதையடுத்து அவரை கைது செய்த வனத்துறையினர், அவரிடமிருந்து இருசக்கர வாகனம் மற்றும் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்த நிலையில் இருந்த புள்ளிமானை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய ஏற்காடு அடுத்த சேட்டுக்காடு பகுதியை சேர்ந்த லோகநாதன், வெள்ளக்காடு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன், மற்றும் சுரேஷ், வாசிக்கவுண்டனுார் பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி ஆகிய நான்கு பேரையும் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.