தமிழ்நாடு

ஈரோடு இடைத்தேர்தல்: 'திமுக ரூ.3,000; அதிமுக ரூ.2,000 பணப்பட்டுவாடா' - சீமான் குற்றச்சாட்டு

ஈரோடு இடைத்தேர்தல்: 'திமுக ரூ.3,000; அதிமுக ரூ.2,000 பணப்பட்டுவாடா' - சீமான் குற்றச்சாட்டு

webteam

'களம் என் கையில் உள்ளது. காசு மட்டும் தான் அவர்கள் கையில் உள்ளது' எனப் பேசியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.    
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மேனகா நவநீதன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், ''மாடியில் கற்களை குவித்து வைத்து அங்கிருந்து கற்களை எரிந்துள்ளனர். காவலர் உட்பட காயமடைந்தனர். நாம் தமிழர் தொண்டர்கள் தலையில் அடிபட்டு காயம் அடைந்து விட்டனர். அதை காரணம் காட்டி சட்ட ஒழுங்கு பிரச்சனை என்று கூட்டத்தில் பேச வேண்டாம் என்று கூறுகிறார்கள். திட்டமிட்டு செய்யப்பட்ட செயல்.

திமுக, அதிமுக முறைப்படி தான் தெருக்களில் பரப்புரை மேற்கொள்கிறார்களா? மக்களை மண்டபத்தில் அடைத்து வைத்தது அனுமதி பெற்று தானா? காசு கொடுக்கிறது, குக்கர் கொடுக்கிறது, கொலுசு கொடுக்கிறது, தேர்தல் ஆணையத்தில்  இது எல்லாம் அனுமதி பெற்று தான் நடக்கிறதா? நாம் தமிழர் கட்சியை பார்த்து பயப்படுகிறார்கள். நாங்கள் வளர்வதில் அவர்களுக்கு தடையாக உள்ளது. ஒன்றை ஆண்டுகளில் ஆட்சிக்கு கிடைத்த சாதனை என்று சொல்லிக்க வேண்டும் அதற்காகத்தான் இவ்வளவு முதலீடு செய்கிறார்கள். ஒருவேளை பின்னடைவு ஏற்பட்டால் அது இந்த ஆட்சிக்கான பின்னடைவாக ஆகிவிடும். இதனால் இவ்வளவு வேலை திட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தேர்தல் ஆணையம் என்பதே ஒன்று கிடையாது. எல்லாமே தேர்தல் ஆணையத்துக்கு தெரிந்தே நடந்து கொண்டிருக்கிறது. 25 ஆம் தேதி வரை பரப்புரை இருக்கிறது 25ஆம் தேதி வரை நின்று வாக்கு சேகரிப்போம்.

நான் வெற்றி பெற்று விடுவேனோ என்ற பயத்தில் இவ்வளவு வேலை செய்ய வைக்கிறது. களம் என் கையில் உள்ளது. காசு மட்டும் தான் அவர்கள் கையில் உள்ளது. குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தை பிபிசி ஆவணப்படத்தை வெளியிடப்பட்டது. அந்த ஆவணப் படத்தை வெளியிட்டதற்காக பிபிசி நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை போட்டவர்கள் தான் இவர்கள் அப்புறம் என்ன கருத்து சுதந்திரம் இங்கே இருக்கிறது.  முதல்வர் இங்கு வரும்போது நான் இருப்பது அவர்களுக்கு இடையூறாய் இருக்கும் என்று நினைக்கிறேன். ஆகையால் என்னை இந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்த வேண்டும் என்று இவ்வளவு வேலையும் நடக்கிறது. கூட்டம் போட்டு  நான் மட்டும்தான் பேசுகிறேன். மற்றவர் யாரும் பேசுவதில்லை.

திமுக ரூ.3,000 கொடுத்துள்ளதாக கூறுகிறார்கள் அதிமுக ரூ.2,000 கொடுத்துள்ளதாக கூறுகிறார்கள். ஒருவேளை கடைசி மூன்று நாட்களில் இன்னும் அதிகப்படியாக பணம் கொடுக்க வாய்ப்புள்ளது'' என்றார்.