தரைப்பாலத்தை ஆட்டோவில் கடக்க முயன்ற தந்தை மற்றும் மகன் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் தந்தை பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் உடுமலையை அடுத்துள்ள அணிக்கடவு வாகத்தொழுவு கிராமத்தை இணைக்கும் தரைப்பாலத்தில், திருமூர்த்தி அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் தாராபுரம் அருகிலுள்ள உப்பாறு அணைக்கு சென்று கொண்டிருந்த நிலையில், நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வெள்ளநீரானது தரைப்பாலத்திற்கு மேல் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது அவ்வழியாக மினி ஆட்டோவில் வந்த சின்னச்சாமி மற்றும் அவரது மகன் செல்வகுமார், தரைப்பாலத்தை கடக்க முயற்சிக்கும் போது வெள்ளத்தில் அடித்துச் செல்லபட்டனர்.
இதையடுத்து தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், மரக்கிளையைப் பிடித்துக்கொண்டு தவித்துக் கொண்டிருந்த சின்னச்சாமியை 3 மணி நேர போராட்டத்திற்குப்பின் பத்திரமாக மீட்டனர். ஆனால் அவரது தந்தை சின்னச்சாமியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனைத்தொடர்ந்து காலையில் சின்னச்சாமியை தேடிய நிலையில், இறந்த நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது. இதையடுத்து சின்னச்சாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.