தமிழ்நாடு

பசுமை வழிச்சாலைக்கு எதிராக தொடர்ந்து ஒலிக்கும் குரல்

பசுமை வழிச்சாலைக்கு எதிராக தொடர்ந்து ஒலிக்கும் குரல்

webteam

பசுமை வழிச்சாலை அமைப்பதற்கு சேலம் மாவட்ட கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உயிரைக் கொடுத்தாலும் கொடுப்போமே தவிர விளைநிலத்தை இழக்க மாட்டோம் என்று அவர்கள் ஆவேசத்தை வெளிப்படுத்துகின்றனர் விவசாயிகள்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் இன்று காலை முதலே பரபரப்பாக காணப்பட்டது. காரணம் பசுமை வழிச்சாலைக்கான ஆட்சேபம் தெரிவிக்க இன்று கடைசி நாள். இதற்காக வந்த கிராம மக்கள் அனைவரிடமும் எதிர்ப்பு குரலை மட்டுமே கேட்க முடிந்தது.  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு காவல்துறை குவிக்கப்பட்டிருந்தனர். 

பசுமை வழிச்சாலை எனப்படும் எட்டு வழிச்சாலை அமைப்பது உறுதி என்று சட்டமன்றத்தில் அறிவித்தார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இதனிடையே தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் விடுக்கப்பட்ட அறிவிப்பில் பசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதில் ஆட்சேபம் இருப்போர் ஜூன் 14 ஆம் தேதிக்குள் மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டிருந்தது. இறுதி நாளான இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்களிடம் மனுக்களை பெறுவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 3 கிராமங்களில் நிலம் கையகப்படுத்த சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் ஐந்து பிரிவாக மனுக்களை பெற்றனர். சம்பந்தப்பட்ட கிராம மக்களுக்கு அவர்கள் கேட்ட தகவல்கள் மற்றும் அவர்கள் கிராமம் வழியாக அமைக்கப்பட உள்ள சாலை திட்ட வரைபடம் வாயிலாக அலுவலர்கள் விளக்கமளித்தனர்.

மேலும் அலுவலர்கள் தரப்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்ட போதிலும், சேலம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் தங்களுக்கு நிலத்தை கொடுக்க விருப்பம் இல்லை என்றே மனு அளித்தனர். விவசாயிகளுக்கு எவ்வித பயனும் இல்லாத இந்தச் சாலை அமைக்கப்படுவதால் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதோடு , தங்களது வாழ்வாதாரமே கேள்விக்குறியாகும் என்பதே அவர்கள் முன்வைத்த கருத்து. இதனை தொடர்ந்து உயிரை கூட விடுவோமே தவிர, இழப்பீடாக கோடி ரூபாய் இழப்பீடு கொடுத்தாலும் விளை நிலங்களை விடமாட்டோம் என்பதே பசுமை வழிச்சாலைக்கு எதிராக இன்று ஒட்டுமொத்த மக்களின் குரலாய் ஒலித்தது.