செய்தியாளர் அ.ஆனந்தன்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இருதய நோய் மற்றும் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இரு மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புதன்கிழமை காலை சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
மீனவர்கள் கச்சத்தீவு க்கும் நெடுந்தீவு க்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மகேந்திரன் மற்றும் ராமு சுந்தரம் ஆகிய இருவருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகையும் அதிலிருந்த மோகன், பாண்டி, ராம்குமார், முத்து கருப்பையா உட்பட 16 மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை படகுடன் இலங்கை மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தில் வைத்து யாழ்ப்பாணம் மீன் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 16 பேர் இன்று ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்படுவார்கள் என யாழ்ப்பாணம் மீன்வளத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கை கடற்படை தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கை கண்டித்து கடந்த மாதம் ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை ஈடுபட்டு இருந்தனர். மேலும், வங்கக்கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ் நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களாலும் ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து மீன்பிடிக்க செல்லாமல் இருந்த சூழ்நிலையில், நீண்ட நாட்களுக்கு பின் புதன்கிழமை (நேற்று), மீண்டும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அச்சமயம், ராமேஸ்வரம் மீனவர்களில் 16 மீனவர்கள் மற்றும் இரண்டு படகுகளை இலங்கை கடற்படை கைது செய்து அழைத்துச் சென்றதற்கு ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்கத்தினர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களில் ஒருவரான அன்பழகனுக்கு மூளையில் நரம்பு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மாணிக்கம் என்பவருக்கு இருதய நோய் இருப்பதால் தினசரி மாத்திரை உட்கொள்ளாமல் உறங்க முடியாத சூழ்நிலையில் மீன்பிடிக்க சென்று இலங்கை கடற்படை கைது செய்யப்பட்டுள்ளார்.
எனவே இவர்கள் இருவருக்கும் மருந்து மற்றும் மாத்திரை உள்ளிட்டவைகளை இந்திய தூதரகத்தின் வாயிலாக அவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் இவர்கள் உடல் நிலையை கருத்தில் கொண்டு நல்லிணக்க அடிப்படையில் மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை இரு நாட்டு அரசும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் குடும்பத்தினர் கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதை அடுத்து கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.