கொரோனா கால ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக, சரக்குகளை அனுப்பும் கண்டெய்னர் பற்றாக்குறை மற்றும் அதன் கட்டணம் உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகள் அதிகரித்துள்ளது. இவற்றுடன் சேர்த்து, 40 சதவீத நூல் விலை உயர்வால் தற்போது திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் சிக்கல்களை சந்தித்து வருகின்றன.
திருப்பூர் மாவட்டம் இந்திய அளவில் பின்னலாடை உற்பத்தியின் தலைநகராக விளங்குகிறது. பின்னலாடை ஏற்றுமதி மூலம் மட்டும், ஆண்டுக்கு ரூ.26,000 கோடி ரூபாய் அந்நிய செலாவணி ஈட்டித்தரும் ‘டாலர் சிட்டியாக’ திருப்பூர் உள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த பின்னலாடையில் 60 சதவீத பின்னலாடை திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் உற்பத்தி செய்யப்படுகிறது. திருப்பூரில் தயாராகும் பின்னலாடைகள் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு மீண்டும் ஆர்டர்கள் வரத் துவங்கி உள்ள நிலையில், நூல் விலை உயர்வு பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் இதுகுறித்து நம்மிடையே பகிர்ந்துக்கொண்டபோது, “கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கிலோ நூல் விலை ரூ.220 முதல் ரூ.230 வரை விற்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது 40 சதவீதம் அளவிற்கு உயர்ந்து கிலோ ரூ.320 முதல் ரூ.330 ரூபாய் என உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு காரணமாக வெளிநாடுகளிலிருந்து பெற்ற ஆர்டர்களை முடித்து கொடுக்கும் போது, பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திக்கும் இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.
புதிதாக பெறும் ஆர்டர்களுக்கு விலை உயர்த்தும் பட்சத்தில் வெளிநாட்டு வர்த்தகர்கள் நமது போட்டி நாடுகளான சீனா, வியட்நாம், கம்போடியா, பங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகளுக்கு தங்கள் ஆர்டர்களை மாற்றி கொடுக்கும் அபாயம் உள்ளது. இதனால் ஆர்டர்களை இழக்கக்கூட நேரிடும். இதனால் ஏற்றுமதி நிறுவனங்கள் தவித்து வருகின்றன. மேலும் மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள ஆர்.ஓ.டி.டி.இ.பி எனும் ஏற்றுமதி மானியம் மூலம் நூல் ஏற்றுமதிக்கு கிலோ ஒன்றிற்கு 10 ரூபாய் மானியம் கிடைக்கும் என்பதால் நூல் உற்பத்தியாளர்கள் ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் தருகின்றனர். இதனால் உள்நாட்டு தேவைக்கு ஈடான நூல் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதாகவும் இதனால் வரும் நாட்களில் நூல் விலை மேலும் உயரும் அபாயம் உள்ளது” என கவலை தெரிவிக்கின்றார்.
அதே போல் இறக்குமதி பருத்திக்கு வரி விதிப்பு, பருத்தி பதுக்கல் உள்ளிட்ட காரணிகளும் பின்னலாடை துறையை பாதித்து வருவதாக தெரிவிக்கின்றனர். இந்தியாவில் இருந்து மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்வதை கட்டுப்படுத்தி, உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் வேலை வாய்ப்பு பெருகும், பொருளாதாரம் மேம்படும் எனவும் மூலப்பொருட்களுக்கான சர்வதேச விலையை அரசே நிர்ணயம் செய்து ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.