தமிழ்நாடு

20 சட்டப்பேரவைத் தொகுதிக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்: மு.க.ஸ்டாலின்

20 சட்டப்பேரவைத் தொகுதிக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்: மு.க.ஸ்டாலின்

webteam

காலியாக உள்ள 20 சட்டப்பேரவைத் தொகுதிக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

திருவாரூர் தொகுதிக்கு வரும் 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என கடந்த 31ஆம் தேதி, தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு வந்ததில் இருந்தே எதிர்க்கட்சிகள், இதை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி வந்தன. தேர்தலை ரத்து செய்யக் கோரி திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் து.ராஜா வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் இன்று காலை அறிவித்துள்ளது.

இதுபற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ’’அனைத்துக் கட்சிகள் மற்றும் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப திருவாரூர் இடைதேர்தல் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் முடிவை அனைவரும் வரவேற்பார்கள். நாடாளுமன்றத் தேர்தலோடு ’மினி சட்டமன்றத் தேர்தல்’ என சொல்லும் அளவுக்கு 20 தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும். திருவாரூரில் நிவாரணப் பணிகள் தடைபட்டுவிடக்கூடாது என்பதே திமுகவின் கருத்து’’ என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.