தமிழ்நாடு

கொரோனா தடுப்பு பணியில் திமுக அரசு மெத்தனமாக செயல்படுகிறது - செல்லூர் ராஜூ காட்டம்

கொரோனா தடுப்பு பணியில் திமுக அரசு மெத்தனமாக செயல்படுகிறது - செல்லூர் ராஜூ காட்டம்

kaleelrahman

மத்திய அரசை குறைசொல்லி விட்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு மெத்தனமாக செயல்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வீடியோ வெளியிட்டு விமர்சனம் செய்துள்ளார்.

கொரோனா குறித்தும், திமுக அரசின் செயல்பாடுகள் குறித்தும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் பேசும்போது, ‘’வீட்டில் இருந்தாலும் கூட விலகி இருந்தால் தான் நல்லது என சுகாதாரத்துறை கூறியுள்ளது. மதுரைக்காரன் என்ற அடிப்படையில் அன்போடு பாசத்தோடு கேட்டுக்கொள்கிறேன். அனைவரும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருங்கள். கொரோனா வைரஸ் மிக மிக வேகமாக பரவிக் கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் இரண்டாம் அலை யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு அனைத்து தரப்பு மக்களையும் பாதித்து வருகிறது.

பயில்வானாக இருந்தாலும் சரி நோஞ்சானாக இருந்தாலும் சரி அத்தனை பேரையும் யாராக இருந்தாலும் கொரோனா பாதித்து வருகிறது. கொரோனா காலகட்டத்தில் அதிமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை மக்கள் இன்றளவும் பாராட்டுகின்றனர். நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் இன்றும் ரத்தினம் போல் உள்ளது. ஆனால் திமுக அரசு மெத்தனமாக இருந்து வருகிறது. மத்திய அரசை குறை சொல்லி விட்டு மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

திமுக அரசு துரித நடவடிக்கைகளை எடுக்கவில்லை என மக்கள் நினைக்கிறார்கள். மக்கள் ஆரம்பத்திலேயே புலம்ப ஆரம்பித்து விட்டார்கள். திமுக அரசு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் வேகம் காட்டவில்லை என மக்கள் நினைக்கின்றனர். தமிழகத்தில் எல்லா மருத்துவமனைகளிலும் படுக்கைகள் இல்லை, ஆக்சிஜன் இல்லை என புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த அரசாங்கத்தில் எல்லாமே இல்லை இல்லை இல்லை என்று தான் உள்ளது.

திமுக அரசின் நடவடிக்கைகள் இந்த நேரத்தில் மெத்தனமாக தான் உள்ளது. கொரோனா காலகட்டத்தில் மக்கள் மிகுந்த பொருளாதார நெருக்கடியில் உள்ளனர். இன்று முதலமைச்சராக இருக்கக்கூடிய ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் அடுத்து ஊரடங்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என பேசினார். இந்த ஆட்சியில் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

எதிர்காலத்தை நினைத்து பொதுமக்கள் பயந்து கொண்டுள்ளனர். அரசும் மாநகராட்சி நிர்வாகமும் துரித நடவடிக்கையை மேற்கொண்டு மக்களை காப்பற்ற வேண்டும். மதுரைக்காரன் வீரமானவன், விவேகமானவன் என்றாலும் கூட கொரோனா அத்தனையையும் சுருட்டி வருகிறது. மக்களுக்கு அரசும் மதுரை மாநகராட்சியும் உதவ வேண்டும்’’ என பேசியுள்ளார்.