தமிழ்நாடு

குக்கர் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது - தினகரன் கோரிக்கை நிராகரிப்பு

குக்கர் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது - தினகரன் கோரிக்கை நிராகரிப்பு

rajakannan

குக்கர் சின்னத்தை தங்கள் தரப்புக்கு ஒதுக்க உத்தரவிடுமாறு தினகரன் தரப்பு வைத்த கோரிக்கையை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

இரட்டை இலைச் சின்னம் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பிற்கு வழங்கப்பட்டதை எதிர்த்து சசிகலா-டிடிவி தினகரன் தரப்பில் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது சரியே என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 

இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கே என்று தீர்ப்பளித்த நிலையில், குக்கர் சின்னத்தையாவது தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று திரனகரன் தரப்பினர் நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்தனர். ஏனெனில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக வழக்கில் தீர்ப்பு வெளியான இரண்டு வாரத்திற்குள், குக்கர் சின்னத்தை தினகரன் தரப்புக்கு கொடுக்கலமா? வேண்டாமா? என்று தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே கூறியிருந்தது. 

ஆனால், தினகரன் தரப்பு கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்துவிட்டார்கள். குக்கர் சின்னத்தை உங்களுக்கு ஒதுக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அதனையடுத்து, மேல்முறையீட்டு நடவடிக்கைகளுக்கு சிறிது காலம் ஆகும் என்பதால் அதுவரை குக்கர் சின்னத்தை யாருக்கும் ஒதுக்காமல் இருக்க வேண்டும் என்று தினகரன் தரப்பின் கோரிக்கைவிடுத்தனர். 

அதனையடுத்து, அடுத்த 15 நாட்களுக்கு குக்கர் சின்னத்தை யாருக்கும் ஒதுக்காமல் இருக்க முடியுமா என்று தேர்தல் ஆணையத்திடம் நீதிபதிகள் கேட்டனர். அதற்கு, அடுத்த 15 நாட்களுக்குள் தமிழகம், புதுச்சேரியில் தேர்தல் எதுவும் நடைபெறாது என்பது குக்கர் சின்னத்தை அதுவரை யாருக்கும் ஒதுக்க மாட்டோம் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

தினகரன் தரப்புக்கு அடுத்ததாக இரண்டு வாய்ப்புள உள்ளது. ஒன்று, உச்சநீதிமன்றத்தை நாடி, இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யலாம். அதேபோல், குக்கர் சின்னம் ஒதுக்குமாறு மற்றொரு மனு தாக்கல் செய்யலாம். இது ஒருபுறம் இருக்க, நாடாளுமன்ற தேர்தலை சுட்டிக்காட்டி, தேர்தல் ஆணையத்தை அணுகி குக்கர் சின்னத்தை தங்கள் தரப்புக்கு ஒதுக்குமாறு கேட்டுப் பெறலாம்.  

அமமுக அங்கீகரிக்கப்பட்ட, பதிவு செய்யப்பட்ட கட்சி இல்லை என்பதால், அனைத்து தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தை வழங்குவார்களா என்ற சந்தேகம் உள்ளது. இது அவர்களுக்கு ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.