தமிழ்நாடு

சடலத்தை விவசாய நிலத்தில் தூக்கி செல்லும் அவல நிலை : சாலை வேண்டி கோரிக்கை

சடலத்தை விவசாய நிலத்தில் தூக்கி செல்லும் அவல நிலை : சாலை வேண்டி கோரிக்கை

webteam

திருவாரூரில் சடலத்தை விவசாய நிலத்தில் தூக்கி சென்ற அவல நிலை உள்ளதால் புதிய சாலை வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் ஆப்பரக்குடி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட ஆதியன் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர்.  இந்த மக்களுக்கான மயானமானது ஆப்பரக்குடியில் ஊருக்கு ஒதுக்குப் புறமாக வயல் வெளிகளுக்கு நடுவே உள்ளது.இதனால் ஊரில் யாரேனும் உயிரிழந்தால் அப்பகுதி மக்கள் இறந்தவர்களை நினைத்து துயர படுகிறார்களோ இல்லையோ இந்த சடலத்தை மயானத்துக்கு தூக்கிச் செல்ல நாம் என்ன பாடு பட வேண்டும் என்ற கவலை. கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்நிலை இருந்து வருகிறது. எனவே ஆப்பரக்குடி குடிமக்கள் பெரும் துன்பப்பட்டு வருகின்றனர்.

இக்கிராமத்தில் யாரேனும் உயிரிழந்தால் அவரது பிரேதத்தை வயல் வழியாக எடுத்துச் செல்லும் பொது பிரேதம் பலமுறை வயலில் விழுந்தும் அல்லது வயல்களுக்கு நடுவில் உள்ள வாய்க்காலில் விழுந்தும் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் நேற்று அப்பகுதியை சேர்ந்த அய்யனார் என்பவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.அவரது உடலை விவசாயிகள் பாடுபட்டு வளர்த்த சம்பா பயிரின் நடுவே தூக்கி சென்றனர். அப்போது உயிரிழந்தவருக்காக வருந்துவதா ? அல்லது தாங்கள் வளர்த்த பயிர்கள் காலில் மிதிபட்டு சாவதைக் கண்டு வருந்துவதா ? என மனம் வருந்திக்கொண்டே கலக்கத்துடன் இடுகாட்டிற்கு சென்றனர். பல சிரமங்களை தாண்டி தான் மயானத்துக்கு செல்ல வேண்டி உள்ளதாக வேதனையுடன் கூறுகின்றனர்.

இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தோம் ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள்  தெரிவித்துள்ளனர். எனவே உடனடியாக மயானத்துக்கு செல்வதற்கு உரிய பாதை அமைத்து தர வேண்டும் என ஆப்பரக்குடி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் உயிரோடு உள்ள மனிதர்களுக்கு மாத்திரமல்ல, இடுகாட்டை நோக்கிப் பயணிக்கும் பல ஆத்மாக்களின் கோரிக்கையும் இதுவாகத்தான் இருக்கும் என மனகுமுரலூடன் கூறுகின்றனர்.     

தகவல்கள் : கு.ராஜசேகர்,செய்தியாளர்- திருவாரூர்.