தமிழ்நாடு

ரூ. 25 ஆயிரம் கடனுக்காக 15 ஆண்டுகளாக குடும்பத்துடன் கொத்தடிமைகளாக வேலை செய்யும் கொடுமை!

ரூ. 25 ஆயிரம் கடனுக்காக 15 ஆண்டுகளாக குடும்பத்துடன் கொத்தடிமைகளாக வேலை செய்யும் கொடுமை!

webteam

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 25 ஆயிரம் ரூபாய் கடனுக்காக 15 ஆண்டுகளாக குடும்பத்துடன் கொத்தடிமைகளாக வேலை செய்து வருவதாக, அப்பாவி குடும்பம் ஒன்று தாசில்தாரிடம் கண்ணீருடன் முறையிடும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

வதைபடுவதிலிருந்து மீட்க கண்ணீருடன் கோரிக்கை காஞ்சிபுரம் மாவட்டம் கோனேரிக்குப்பத்தில், நடராஜ் என்பவரிடம் 15 ஆண்டுகளாக 28 பேர் கொத்தடிமைகளாக இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து காஞ்சிபுரம் தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் அங்கு சென்றனர். அவர்கள் சென்றபோது, அவர்களை சூழ்ந்து கொண்ட அவர்களில் ஒரு குடும்பத்தினர், தங்களுக்கு சரிவர உணவு வழங்கவில்லை என்றும், குழந்தைகளுக்கு வெறும் தண்ணீரை மட்டுமே உணவாக கொடுக்கும் அவலம் நிலவுவதாகவும் கண்ணீருடன் முறையிட்டனர். 

மேலும், பூச்சிகள், பாம்புகள் எளிதில் வரும் பகுதியில், அச்சத்துடனேயே குழந்தைகளுடன் தங்கியிருப்பதாக அவர்கள் கூறினர். குழந்தைகள் பள்ளி செல்ல விரும்புவதாகவும், ஆனால் அதற்கு நடராஜ் மறுப்பதாகவும் தொழிலாளர்கள் உருக்கமாக தெரிவித்தனர். மனதை நெகிழச் செய்யும் இந்த வீடியோ காட்சிகள், தற்போது வெளியாகி உள்ளது.

சில நூறு ரூபாய்கள் கடன் கொடுத்துவிட்டு பல ஆயிரம் ரூபாய் என கணக்கெழுதப்படுவதாகவும், பகல் முழுவதும் ஓய்வின்றி மரம் வெட்ட நடராஜ் பணிப்பதாகவும் வேதனையுடன் குறிப்பிட்டனர். தொழிலாளர்களின் நிலையை அறிந்துகொண்ட அதிகாரிகள், 28 பேரையும் மீட்டனர்.