சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு, தனக்கு அதிருப்தி அளிப்பதாக கவுசல்யா தெரிவித்துள்ளார்.
உடுமலைபேட்டை சங்கர் ஆணவக் கொலை, தமிழ்நாடு முழுவதும் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை விடுதலை செய்யப்பட்டுள்ளார். மற்ற 5 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது. கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி உள்பட 3 பேரின் விடுதலையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. விடுதலையை எதிர்த்து காவல் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதுமட்டுமில்லாமல், ஒருவருக்கு விதித்த ஆயுள் தண்டனை, மற்றொருவருக்கு விதித்த 5 ஆண்டு சிறை தண்டனையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள கவுசல்யா, நீதிமன்ற தீர்ப்பு தனக்கு அதிருப்தி அளிப்பதாக கூறியுள்ளார். இதனிடையே நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.