தமிழ்நாடு

வறுமையால் 45 நாட்களில் குழந்தையை கொடுத்தேன்.. மீண்டும் குழந்தையை கேட்டு பெண் வழக்கு

வறுமையால் 45 நாட்களில் குழந்தையை கொடுத்தேன்.. மீண்டும் குழந்தையை கேட்டு பெண் வழக்கு

webteam

டிஎன்ஏ அடிப்படையில் குழந்தையை அதன் பெற்றோரிடம் ஒப்படைக்கலாம் எனக் கூறி, குழந்தையை திரும்ப கேட்ட வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முடித்து வைத்தது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அம்பிகா, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," திருமணமான எனக்கு கடந்தாண்டு அக்டோபர்‌ மாதம் 9-ஆம் தேதி மூன்றாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இதற்காக வாழவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றேன். எனது குடும்பம் பெரும் வறுமை நிலையில் இருந்ததால், குழந்தை இல்லாமல் தவித்த விருதுநகர் மாவட்டம், மூளிப்பட்டியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் - கோமதி தம்பதிக்கு, எனது 3-வது குழந்தையை சுமார் 40 நாட்களில் கொடுத்துவிட்டேன். அவர்கள் பிறப்பு சான்றிதழ் பெறுவதற்காக என்னை தேடியபோது அவர்களால் தொடர்பு கொள்ள முடியாமல் போனது. இதனிடையே, குழந்தையை கடந்த டிசம்பர் 23-ல் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் ஒப்படைத்துள்ளனர். எனவே, அந்த குழந்தையை என்னிடம் மீண்டும் ஒப்படைக்குமாறு உத்தரவிட வேண்டும்"எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரித்தார். அப்போது அரசுத்தரப்பில், "சம்பந்தப்பட்ட குழந்தையிடம் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் வர 2 மாதம் ஆகும். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். டிஎன்ஏ முடிவு அடிப்படையில் குழந்தை, உரிய பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, டிஎன்ஏ சோதனை அடிப்படையில் குழந்தையை, அதன் பெற்ரோரிடம் ஒப்படைக்கலாம் எனக்கூறி மனுவை முடித்து வைத்தார்.