தமிழ்நாடு

சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டத்திற்கான செலவு மதிப்பீடு ரூ.63,746 கோடி - தமிழக அரசு!

சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டத்திற்கான செலவு மதிப்பீடு ரூ.63,746 கோடி - தமிழக அரசு!

ச. முத்துகிருஷ்ணன்

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் முதற்கட்டத்திற்கான நீட்டிப்பு மாநில அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளதாகவும் 2ஆம் கட்டத்திற்கான செலவு மதிப்பீடு ரூ.63,746 கோடியாக திருத்தியமைக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் முதற்கட்டத்திற்கான நீட்டிப்பு - விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை பன்னாட்டு வங்கியின் நிதி உதவிக்கு பரிந்துரைப்பதற்காக மாநில அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளதாக திட்டம் வளர்ச்சி & சிறப்பு முயற்சிகள் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் தென் பகுதிகளில் நுழைவாயிலான ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், உருவாகி வரக்கூடிய கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்துவதற்கும் சென்னை மெட்ரோ ரயில் வழித்தடம் I-ஐ விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை நீடிப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு/ விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு அரசு 2020-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒப்புதல் அளித்ததாகவும், ஏஇகாம் நிறுவனம் தயாரித்த விரிவான திட்ட அறிக்கை இருதரப்பு பன்னாட்டு வங்கிகளின் நிதி உதவிக்கு பரிந்துரைப்பதற்காக தற்போது மாநில அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளதாகவும் திட்டம், வளர்ச்சி & சிறப்பு முயற்சிகள் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் II-இன் செலவு மதிப்பீடு ரூ.63,746 கோடியாக திருத்தியமைக்கப்பட்டு ஒன்றிய அரசின் ஒப்புதல் மற்றும் நிதி உதவிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திட்டம், வளர்ச்சி & சிறப்பு முயற்சிகள் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் II-க்கு 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழக அரசு கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதல் மற்றும் நிதி பங்களிப்பிற்காக இரு தரப்பு மற்றும் பன்னாட்டு அமைப்புகளின் நிதியுதவிக்காகவும் பரிந்துரை செய்யப்பட்டது. மெட்ரோ கட்டம் II-ல் உள்ள வழித்தடங்களில் ஒன்றான வழித்தடம் 4ல் கலங்கரை விளக்கத்திருந்து இருந்து வடபழனி மற்றும் போரூர் வழியாக பூந்தமல்லி வரை நீட்டிப்பதற்கும், திட்டச் செலவினை குறைப்பதற்காக வழித்தடம் 5-ல் சில சுரங்கப்பாதை வழித்தடப் பகுதிகளை உயர்த்தப்பட்டவைகளாக மாற்றுவதற்கும் அரசு முடிவு செய்தது.

மத்திய அரசின் புதிய மெட்ரோ இரயில் கொள்கையின் அடிப்படையில் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் II-இன் செலவு மதிப்பீடு ரூ.61,843 கோடியாகவும், கட்டுமான காலத்திற்கான வட்டி மற்றும் முன் இறுதி கட்டணத்தை சேர்த்து ரூ.63,246 கோடியாகவும் திருத்தியமைக்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதல் மற்றும் நிதி உதவிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் I-க்கு வழங்கியதைப் போல் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் II-க்கும் 50:50 என்ற சதவீத பங்களிப்பு அடிப்படையில் ஒப்புதல் வழங்கும் படி மத்திய அரசிடம் கூறப்பட்டதாகவும், இத்திட்டமானது இந்தியாவிலேயே ஒரே கட்டத்தில் செயல்படுத்தப்படும் மிகப்பெரிய மெட்ரோ ரயில் திட்டமாக அமைந்துள்ளது என்றும் திட்டம், வளர்ச்சி & சிறப்பு முயற்சிகள் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.