அல்ட்ரா டெக் சிமெண்ட் ஆலை நிர்வாகம், ஏற்கனவே பணிபுரிந்த உள்ளூர் தொழிலாளர்களை வேலையில் இருந்து நீக்கிவிட்டு வடமாநில தொழிலாளர்களுக்கு பணிநியமனம் செய்ததை கண்டித்து இந்திய தொழிற்சங்க மையத்தை சேர்ந்தவர்கள் அரியலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூரில் செயல்பட்டு வரும் அல்ட்ரா டெக் சிமெண்ட் ஆலையில், லோடிங் ஒப்பந்த தொழிலாளர்களாக ஏற்கனவே பணிபுரிந்த தொழிலாளர்களை வெளியேற்றிவிட்டு, அவர்களுக்கு பதிலாக வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதனை கண்டித்தும் மீண்டும் அவர்களை அதே பணியில் தங்களை நியமனம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய தொழிற்சங்க மையத்தை சேர்ந்தவர்கள், அரியலூர் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஆர்ப்பாட்டத்தில், அரசு சிமெண்ட் ஆலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு வேலை வழங்க வேண்டும். முறைசாரா தொழிலாளர் கட்டுமான தொழிலாளர்களின் நிறுத்தப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட பணபலன்களை நிபந்தனை இன்றி வழங்க வேண்டும். பென்சன் தொகையை 3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர், கொரோனா காலத்தில் வடமாநிலத்தவர்கள் இல்லாத நேரத்தில் பணி செய்ய வேண்டும் என்பதற்காக, வேலை உத்தரவாதம் கொடுக்கப்படும் எனவும், சம்பளம் உயர்த்தி தரப்படும் எனவும், நிரந்தரமாக வேலையில் அமர்த்தப்படுவீர்கள் எனவும் வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது கொரானா காலம் போன பிறகு கொரானா காலத்தில் வேலை பார்த்த உள்ளூர் தொழிலாளிகளை வெளியேற்றிவிட்டு வடமாநிலத்தவர்களை பணி அமர்த்தியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.