குன்னூர் அருகே காட்டேரி மலைப் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில், விமானப்படை தளபதி இன்று நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்துகிறார்.
ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் மனைவியுடன் பயணித்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து நிகழ்ந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து ராணுவ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்டேரி மலைப் பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கும் ராணுவ அதிகாரிகள், விபத்தை நேரில் பார்த்த உள்ளூர் மக்களிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது ஹெலிகாப்டர் மிக தாழ்வாக பறந்து சென்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். வானிலையும் சீராக இருந்த நிலையில், இந்த விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது தொடர்பாக இந்திய விமானப் படை தொழில்நுட்ப ரீதியிலான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும், விபத்து நடந்த இடத்தில் விமானப் படை தளபதி இன்று நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்துகிறார். இதற்கிடையே, விபத்து நடந்த இடத்தில் இருந்து CRASH DATA RECORDER என்றழைக்கப்படும் குரல் பதிவு கருவியை கண்டறிந்து, அதில் பதிவான பேச்சுகளை ஆராய்ந்தால் மட்டுமே முழு தகவல் தெரிய வரும் என கூறப்படுகிறது.