தமிழ்நாடு

'ஹிட்'  என காண்பிக்க பட வசூல் மிகைப்படுத்தி காட்டப்படுகிறது: அமைச்சர் பாண்டியராஜன் சூசகம்

'ஹிட்'  என காண்பிக்க பட வசூல் மிகைப்படுத்தி காட்டப்படுகிறது: அமைச்சர் பாண்டியராஜன் சூசகம்

JustinDurai

திரைப்படங்கள் வெற்றி பெற்றது என்பதை காண்பிப்பதற்காக 2 கோடி வசூல் வந்தாலும் 20 கோடி என கூறுவது இயல்பானது என ‘மாஸ்டர்’ திரைப்பட வசூல் குறித்த கேள்விக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பதிலளித்தார்.

சென்னை ஆவடி தொகுதிக்குற்பட்ட திருநின்றவூர் பெரியார் நகர், திருமுருகன் நகர், சக்திவேலன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 6 கோடி மதிப்பிலான சாலை அமைக்கும் பணிகளுக்கு அமைச்சர் பாண்டியராஜன் அடிக்கல் நாட்டி  துவக்கி வைத்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திரையரங்குகள் பெரும்பாலும் முழு இருக்கையுடன் இயங்கவில்லை எனவும் திரைப்படங்கள் வெற்றி பெற்றது என்பதை காண்பிப்பதற்காக 2 கோடி வசூல் வந்தாலும் 20 கோடி என கூறுவது இயல்பானது எனவும், ‘மாஸ்டர்’ திரைப்பட வசூல் குறித்த கேள்விக்கு அமைச்சர் மறைமுகமாக பதிலளித்தார்.

தொடர்ந்து பேசியவர், ‘’மத்திய அரசிடம் தமிழகத்தின் உரிமைகளுக்காக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷாவை முதல்வர் சந்தித்துள்ளார். யாருக்கும் பயப்பட வேண்டிய தேவை முதல்வருக்கு இல்லை. 2ஜி வழக்கு விரைவாக நடைபெறுவதால் மத்திய பாஜக அரசை விமர்சிக்காமல் அதிமுகவை விமர்சித்து வருகிறார் ஸ்டாலின்.

கொரோனா தடுப்பூசி குறித்து காங்கிரஸ் கூறிவரும் கருத்துகள் தேச துரோக செயலாகும். கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் ராகுல்காந்தி மற்றும் ஸ்டாலின் மிகப்பெரும் விலையை தரவேண்டி இருக்கும். அதிமுக கூட்டணி பலமாக உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறாதா என்பதுகூட தெரியவில்லை. எங்கள் கூட்டணி சுயமரியாதை உள்ள கூட்டணி’’ எனக் கூறினார்.