தமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் : வலுக்கும் மாணவர்கள் போராட்டம்

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் : வலுக்கும் மாணவர்கள் போராட்டம்

webteam

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஃபேஸ்புக் மூலம் பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி அதை வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசு உள்பட 4 பேர் சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, அதைத்தொடர்ந்து சிபிஐ விசாரணை தற்போது மாற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தையே உலுக்கிய இந்தச் கொடூர சம்பவத்துக்கு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்தனர். பொள்ளாச்சியில்‌ நடந்துள்ள இந்தப் பாலியல் கொடூரத்தைக் கண்‌டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்கக் கோரி த‌ஞ்சையில்‌ குந்தவை நாச்சியார் மகளிர் அ‌ரசுக் கல்லூரியைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து‌‌ கொண்டு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் உடுமலைப்பேட்டையில், பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தைக் கண்டித்து கல்லூரி மாணவிகள் சாலையில் அமர்ந்து போராட்‌டம் ந‌டத்தி‌னர்‌.‌‌‌ அந்த‌ப் போராட்டத்தால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது பொள்ளாச்சி‌ சம்பவத்தில் குற்றம் செய்த அனைவரும் தண்டிக்க‌ப்பட வேண்டும் எ‌ன மாணவிகள் வலியுறுத்தினர். இதனையடுத்து சில அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டன. மேலும் சிலர் போராட்டங்களுக்கு அறிவிப்பு விடுத்துள்ளனர்.