தமிழ்நாடு

ஆளுநர் Vs மாநில அரசு! ஜெயலலிதா - சென்னா ரெட்டி இடையே 1995ல் நிகழ்ந்த உச்சக்கட்ட பனிப்போர்!

ஆளுநர் Vs மாநில அரசு! ஜெயலலிதா - சென்னா ரெட்டி இடையே 1995ல் நிகழ்ந்த உச்சக்கட்ட பனிப்போர்!

PT

ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையே நடைபெறும் மோதல் 30 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது.

ஆட்சியில் ஆளுநரின் தலையீடு

சமீபகாலமாக, மாநில அரசின் விவகாரங்களில் ஆளுநர்கள் தலையீடு செய்வதாக விமர்சனங்கள் எழுந்துவருகின்றன. அதிலும், பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலதான் ஆளுநரின் தலையீடு அதிகமிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, டெல்லி, புதுச்சேரி, மேற்குவங்காளம் உள்ளிட்ட மாநிலங்களைக் குறிப்பிடலாம். அதிலும் தமிழ்நாடும், கேரளமும் தினந்தோறும் ஆளுநர்களுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகின்றன. மேற்குவங்கத்தில் சற்றே ஓய்ந்திருக்கிறது. இந்தி திணிப்பு மற்றும் சனாதன பேச்சுகள், ஆட்சியில் தலையீடு, கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்காமை உள்ளிட்ட செயல்களால் ஏற்கெனவே ஆளுநர் ஆர்.என்.ரவி மீது அதிருப்தியில் இருக்கும் தமிழக அரசு, அவரை திரும்ப அழைக்க வேண்டும் என மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அதிலும், கடந்த ஜனவரி 9ஆம் தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் முதல் நாளில் அரசு கொடுத்த அறிக்கையை ஆளுநர் முறையாக வாசிக்கவில்லை என்பதுதான் தற்போது வரை விவாதமாக இருந்துவருகிறது. இந்த பிரச்சினையால் ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் நெருப்பு தற்போது கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியிருக்கிறது. அதேநேரத்தில், இப்படியான ஆளுநருக்கும் முதல்வருக்குமான மோதல் போக்கு இன்று, நேற்று தொடங்கியது அல்ல என்கிறது வரலாறு. 30 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. 1991-1996 வரையிலான அதிமுக ஆட்சியில் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் அப்போதைய ஆளுநர் சென்னா ரெட்டிக்கும் இடையே நடைபெற்ற மோதல் சம்பவங்கள், இப்போது வரலாற்றின் பக்கங்களிலிருந்து வெளிவரத் தொடங்கி இருக்கின்றன.

சென்னா ரெட்டி மீது பாய்ந்த ஜெயலலிதா!

1993ஆம் ஆண்டு சென்னா ரெட்டி தமிழக ஆளுநராய்ப் பதவியேற்ற கொஞ்ச நாட்களிலேயே சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தேறியது. இதில் 11 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நிகழ்ந்தபோது, ஜெயலலிதா சென்னையில் இல்லை. ஆனால், விஷயத்தைக் கேள்விப்பட்ட ஆளுநர் சென்னா ரெட்டி உடனடியாக குண்டுவெடிப்பு நடைபெற்ற இடத்துக்குச் சென்று பார்வையிட்டார். சென்னா ரெட்டி அந்த இடத்துக்குச் சென்றதுதான் அவர்களுக்குள் முதல் மோதல் போக்கை ஆரம்பித்துவைத்தது. இதனால் பொங்கி எழுந்த ஜெயலலிதா, ‘அவர் எப்படி அங்கு செல்லலாம்’ என்று ஆளுநர் மீது புகார் தெரிவித்து அன்றைய பிரதமர் நரசிம்ம ராவுக்கு கடிதம் எழுதினார். சென்னா ரெட்டியும் அதற்குப் பதில் அளித்து விளக்கம் கொடுத்தார்.

இதில் தொடங்கிய அவர்களுடைய மோதல், 1995இல் ஜெயலலிதா மீது ஊழல் வழக்கை பதிய ஆளுநர் அனுமதி அளித்ததுவரை நீடித்தது. 1994, 1995ஆம் ஆண்டுகளில் ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை ஜெயலலிதாவும் அவருடைய அமைச்சர்களும் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்தார்கள். இவர்களுடைய மோதல் உச்சத்தில் இருந்தபோதுதான் ஆண்டின் (1994) முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தை ஆளுநர் உரை நிகழ்த்தாமல் கூட்டலாம் என்று மாற்றப்பட்டது.

சென்னா ரெட்டி மீது ஜெ. பகீர் புகார்!

குடியரசு தின விழாவிலும் ஆளுநர் கொடியேற்றும் விழாவை முதல்வர், அமைச்சர்கள் புறக்கணிப்பு செய்தனர். மேலும், ஆளுநர் மாளிகை அருகே அதிமுக எம்எல்ஏக்கள் தலைமையிலேயே ஆர்ப்பாட்டம் நடத்தினர். அது மட்டுமின்றி, பல்கலைக்கழகங்களில் வேந்தரின் அதிகாரத்தை ஆளுநரிடமிருந்து மாநில முதல்வருக்கு மாற்றி சட்டத் திருத்தம் கொண்டுவந்து ஜெயலலிதா அதிரவைத்தார். தொடர்ந்து, ஆளுநர் மாளிகையில் மராமத்துப் பணிகளுக்கு நிதி ஒதுக்காமல் இழுத்தடித்தார். இதைவிட ஒரு ‘பகீர்’ புகாரையும் ஜெயலலிதா, சென்னா ரெட்டி மீது சுமத்தினார். ’தமிழக சட்டப்பேரவையில், ஆளுநர் என்னிடம் தவறாக நடந்துகொண்டார்’ என்ற புகார், நாடு முழுவதும் பேசுபொருளானது.

1995ஆம் ஆண்டு, மதுரை காமராஜ் பல்கலை பட்டமளிப்பு விழாவிற்குச் சென்ற சென்னா ரெட்டி மாவட்ட அதிகாரிகளை விருந்தினர் மாளிகைக்கு அழைத்து விவரங்களைக் கேட்டதையும் ஜெயலலிதா விடவில்லை. ஆளுநரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து ஆளுநருக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதினார்.

இந்த நிலையில்தான் டான்சி மற்றும் நிலக்கரி ஒப்பந்த ஊழல் தொடர்பாக ஜெயலலிதா மீது வழக்கு தொடர பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி அளித்த மனுவிற்கு, ஆளுநர் சென்னா ரெட்டி அனுமதி வழங்கியதால், 1995ஆம் ஆண்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிமுகவினரால் முற்றுகையிடப்பட்டார். அத்துடன் நிற்காத அதிமுகவினர், ‘மாநில அரசின் அதிகாரங்களில் தலையிடுகிறார்’ என்று கூறி சென்னா ரெட்டி காரை திண்டிவனம் அருகே வழிமறித்து ஆர்ப்பாட்டம் நடத்தி அதிரடி காட்டினர். அப்போது ஆளுநர் கார் மீது கற்கள், அழுகிய முட்டைகள், தக்காளியை அதிமுகவினர் வீசினார்கள்.

ஆளுநர் ஆர்.என்.ரவி மீதான விமர்சனங்கள்!

இப்படி, ஜெயலலிதாவுக்கும் சென்னா ரெட்டிக்கும் இடையே 30 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த யுத்தம்தான், இன்று பல மாநிலங்களிலும் வெடித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதல், பல்வேறு மேடைகளில் தமிழ்நாடு வரலாறு, கலாச்சாரம், பழமை, இந்துத்துவா, சனாதன தர்மம், திருக்குறள் என்று பல விஷயங்கள் பற்றி பேசி வருவது சர்ச்சை ஆகி வருகிறது. ஆர்.எஸ்.எஸ்., மத்திய அரசின் பங்கு, இந்தி திணிப்பு, புதிய கல்விக்கொள்கை ஆகியவை பற்றியும் அடிக்கடி பேசி வருகிறார்.

தவிர, தமிழ்நாடு அரசு அனுப்பிய பல மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். அதில் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவும் ஒன்று. அவர், உடனே ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தியதால், அந்த மசோதா கடந்த ஆண்டு நவம்பர் 25ஆம் தேதியுடன் காலாவதியானது குறிப்பிடத்தக்கது. இப்படி, அவருடைய செயல்களும், பேச்சுகளும் பல விவாதங்களை எழுப்பி வருவதால்தான் அவரைத் திரும்ப வேண்டும் என ஆளும் திமுக கூட்டணி அரசு முடிவெடுத்துள்ளது.