தமிழ்நாடு

சிறுவன் மீது குண்டு பாய்ந்த விவகாரம் - பயிற்சித் தளத்தில் கோட்டாட்சியர் விசாரணை

JustinDurai

புதுக்கோட்டை அருகே நார்த்தாமலையில் சிறுவன் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்த விவகாரத்தில் தமிழக காவல் துறையினரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் கோரியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பசுமலைப்பட்டி கிராமத்தில் துப்பாக்கி சுடும் தளத்தில் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் பயிற்சி செய்த போது தலையில் குண்டு பாய்ந்த ஒரு சிறுவன் சிகிச்சை பெற்று வருகிறான். இந்நிகழ்வு குறித்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த தொழிற் பாதுகாப்பு படை கமாண்டன்ட் நோயல் மற்றும் ஆய்வாளர் சிதம்பரம் ஆகியோரிடம் இலுப்பூர் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி விசாரணை நடத்தினார். அப்போது பயிற்சி தளத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த சிறுவன் மீது குண்டு பாய்ந்தது எப்படி என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கோட்டாட்சியர் எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த தொழிற் பாதுகாப்பு படையினர், தாங்கள் பயிற்சி பெற்று சென்றபின் தமிழக காவல் துறையை சேர்ந்த 18 பேரும் பயிற்சி பெற்றதாக தெரிவித்தனர். எனவே அவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் எழுத்துபூர்வமாக அறிக்கை அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து கோட்டாட்சியர் தண்டாயுதபாணி சம்பவம் நடந்த பசுமலைப்பட்டியில் நேரில் ஆய்வு செய்து பொது மக்களிடம் விசாரித்த பின் தனது அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க உள்ளார்.