தமிழ்நாடு

”முதல்வரும் தூங்க மாட்டார்.. எங்களையும் தூங்க விட மாட்டார்!” - அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

”முதல்வரும் தூங்க மாட்டார்.. எங்களையும் தூங்க விட மாட்டார்!” - அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

webteam

”பொதுப்பணித்துறையை பொருத்தவரையில் முதல்வரும் தூங்குவது கிடையாது, எங்களையும் தூங்க விடுவதும் கிடையாது. முதல்வர் இதுவரை 23 முறை கலைஞர் நூலகத்தின் கட்டுமானத்தை பற்றி கேட்டுள்ளார்” அமைச்சர் எ.வ வேலு தெரிவித்துள்ளார்.

பொதுப்பணி துறை பொறியாளர் மற்றும் கட்டட கலைஞர்களுக்கான நவீன கட்டுமான தொழில்நுட்பங்கள் மற்றும் செய்நுட்ப அறிவு பற்றிய ஒருநாள் பயிற்சியானது அடையாறில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. அதில் பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ வேலு மற்றும் பொதுப்பணித் துறையின் அரசு முதன்மை செயலர் மணிவாசன், வீட்டு வசதி & நகர்புற வளர்ச்சி செயலர் அபூர்வா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதன முழுவிவரம்:

துறைகளுக்கெல்லாம் தாய் பொதுப்பணித்துறை

”முதல்வர் திராவிட மாடல் ஆட்சி என சொல்லிக் கொண்டிருக்கிறார். திராவிட கலாச்சாரத்தின் நீட்சியாக கட்டடக் கலையை கொண்டு திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. 165 ஆண்டுகள் தாண்டி தாய் துறையாக பொதுத்துறை இருந்துவருகிறது. பொதுப்பணி துறையில் தரம் இருப்பது மட்டுமில்லாமல் தரத்தோடு சேர்ந்து அழகும் இருக்க வேண்டும். அதற்கு புதிய தொழில்நுட்பங்களை நாம் பயன்படுத்த வேண்டும். இத்தகைய புதிய தொழில்நுட்பங்களை மாவட்ட நிர்வாகத்திலிருந்து செயல்படுத்த வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி, அனைத்து அலுவலக கட்டிடமும் நம் மூலம் காட்டப்படுகிறது.

சுனாமி போன்ற பேரழிகளை தாங்குமாறு கட்டிடக்கலை வேண்டும்!

காலநிலை மாறிக்கொண்டிருக்கிறது. தாத்தா காலத்தில் சுனாமி என்பது பார்த்திருக்க மாட்டார்கள். ஆனல், நாம் பார்க்கிறோம். இயற்கை சீற்றத்தை தாங்கும் சக்தி கட்டிடத்திற்கு இருக்க வேண்டும் என்றால் புதிய யுக்தி வேண்டும். பூகம்பம், சுனாமி, புயல் போன்றவற்றை தாங்கும் வகையில் அரசு கட்டிடம் கட்ட வேண்டும். AEC களை ஒருங்கிணைக்கும் பணியில் நாம் ஈடுபடுகிறோம். அது களத்தில் இருக்கும் செயல் பொறியாளரின் கையில் தான் உள்ளது. புதிய யுக்தியை பயன்படுத்துவோம், தொழில்நுட்பங்களை பயன்படுத்துவோம். அதற்காகவே இந்த பயிலரங்கம் நடத்தப்படுகிறது.

300 ஆண்டுகள் கழித்தும் கட்டிடங்கள் நீடிக்க வேண்டும்

இதுவரை இதுபோன்ற பயிலரங்கம் நடைபெற வில்லை என அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை இணைத்து இதற்கு முன்பு சாலை பாதுகாப்பு தொடர்பான பயிலரங்கம் நடத்தினோம். ஒரு கட்டடத்தை ஆய்வு செய்தால் கட்டுமானத்தை பார்க்காமல் நேரடியாக ஆய்வகத்தில் சென்று கட்டிட தரத்தை பரிசோதனை செய்வேன். 35 ஆண்டுகளாக இந்தத் துறையில் இருப்பதால் எனக்கு கட்டுமானம் குறித்த அனுபவம் உள்ளது. இதுபோன்று மற்ற எந்த பொதுப்பணி அமைச்சரும் கேட்டதில்லை என அதிகாரிகள் கூறுகிறார்கள். 300 ஆண்டுகள் கழித்தும் நமது கட்டிடங்களை பார்க்க வேண்டும், பாராட்ட வேண்டும். மழைநீர் வடிகால் மற்றும் சாலைகள் மேற்கொண்ட பணிகளை முதல்வர் மற்றும் தலைமைச் செயலாளர் பாராட்டினார்கள்.

முதல்வரும் தூங்குவதில்லை எங்களையும் தூங்க விடுவதில்லை

பொதுப்பணித்துறையை பொறுத்தவரையில் முதல்வரும் தூங்குவது கிடையாது, எங்களையும் தூங்க விடுவது கிடையாது. முதல்வர் இதுவரை 23 முறை கலைஞர் நூலகத்தின் கட்டுமானத்தை பற்றி கேட்டுள்ளார். முதல்வர் எந்த திட்டத்தை எடுத்தாலும் தொடர் நடவடிக்கையில் இருப்பார். முதல்வர் என்ன நினைக்கிறாரோ அதை நிறைவேற்ற வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

ஆற்று மணலை இனி நம்ப முடியாது.. எம்-சான்டை தான்!

கே.பி பார்க் கட்டுமானத்தில் எம்.சாண்ட் சரியாக பூசவில்லை என கூறுகிறார்கள். எம்.சாண்ட் பயன்படுத்தினால் வேதி சேர்மத்தையும் இணைக்க வேண்டும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இனி ஆற்றில் மணல் கிடையாது. தாமிரபரணி, பாலாறு மற்றும் தென்பெண்ணை ஆறுகளில் இனி மணல் எடுக்கக் கூடாது என நீதிமன்றம் கூறுகிறது. 38 வருவாய் மாவட்டமும் காவிரி மண்ணை மட்டுமே நம்ப முடியாது அல்லவா. எனவே இனி எம்-சான்டை தான் பயன்படுத்த முடியும்.

வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா நினைவு கட்டிடம்

2024ல் கருணாநிதிக்கு நூற்றாண்டு விழா காரணமாக மதுரையில் கலைஞர் நூலகம் கட்டப்பட்டு வருகிறது. கீழடி அருங்காட்சியகமும் பொது பணித்துறையால் கட்டப்பட்டுள்ளது. 200 கோடி மதிப்பில் தென்சென்னை பல்நோக்கு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. 3 தனியார் நிறுவனம் மூலம் குறிப்பிட்ட கட்டிடங்களை ஆய்வு செய்ததில், பொதுப்பணி துறையின் வடிவமைப்பை தான் தனியார் ஆய்வாளர்கள் தேர்ந்தெடுத்தார்கள். மேலும் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா நினைவு கட்டிடம் கேரளாவில் கட்டப்பட்டு வருகிறது. அதற்கான கட்டுமான டெண்டர் விடப்பட்டு, கட்டுமானம் தொடங்கியுள்ளது. அடுத்த வருடம் தமிழ்நாடு முதல்வர் மற்றும் கேரள முதல்வர் திறந்து வைப்பார்கள்” என்று பேசினார்.