தமிழ்நாடு

முதல்வர் தலைமையில் ‘கஜா’ புயல் குறித்து ஆலோசனை

முதல்வர் தலைமையில் ‘கஜா’ புயல் குறித்து ஆலோசனை

webteam

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்தும், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரண உதவிகள் குறித்தும் இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. 

‘கஜா’ புயல் கடந்த 15ஆம் தேதி இரவு நாகை - வேதாரண்யம் இடையே கரையைக் கடந்தது. இதில் நாகை, புதுக்கோட்டை, திருவாரூர்,
தஞ்சை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடும் சேதத்திற்கு உள்ளாகின. ஏராளமான பயிர்களும், வீடுகளும், பொருட்களும் சேதம் அடைந்தன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
 
ஆனால் அரசு தரப்பில் இருந்து பெரும்பாலும் நிவாரணம் ஏதும் கிடைக்கவில்லை என பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டை முன் வைத்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் மரங்களும் மின் கம்பங்களும் சாய்ந்து போக்குவரத்து மற்றும் மின் இணைப்பு கடுமையாக 
பாதிக்கப்பட்டுள்ளது. அவற்றை சீர் செய்யும் பணியில் பணியாளர்கள் இறங்கியுள்ளனர்.
 
இதனிடையே மத்திய அரசிடம் நிவாரண நிதி கோர முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 22ஆம் தேதி டெல்லி செல்லவுள்ளார். ‘கஜா’ புயலின் தாக்கம் குறித்து பிரதமரிடம் அவர் எடுத்துரைக்க உள்ளார். அத்துடன் ‘கஜா’ புயல் குறித்து மேற்கண்ட ஆய்வறிக்கைகளையும் பிரதமரிடம் கொடுத்து நிவாரண நிதியை கோர இருக்கிறார். 

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்தும், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரண உதவிகள் குறித்தும் இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பல்வேறு துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.