தமிழ்நாடு

‘அரியலூர் மாணவி விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் ஏன் மவுனமாக உள்ளார்’ - விஜயசாந்தி கேள்வி

‘அரியலூர் மாணவி விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் ஏன் மவுனமாக உள்ளார்’ - விஜயசாந்தி கேள்வி

சங்கீதா

அரியலூர் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் முதல்வர் ஏன் மவுனமாக உள்ளார் என தெலங்கானா முன்னாள் எம்.பி. விஜயசாந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.  

அரியலுார் மாவட்டம், வடுகபாளையம் கிராமத்தை சேர்ந்த, 17 வயது மாணவி, தஞ்சாவூர் மாவட்டம், மைக்கேல்பட்டியில் உள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இவர், விஷம் குடித்து கடந்த 19-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். மதம் மாற கட்டாயப்படுத்தியது, விடுதியில் வேலை வாங்கியது என இருவேறு காரணங்கள் மாணவியின் தற்கொலைக்கு காரணமாக கூறப்பட்டு வருகின்றன. மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு பா.ஜ.க,  தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றது. இதற்கிடையில், மாணவியின் தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

இந்நிலையில், மாணவியின் மரணம் குறித்து நேரில் விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட, மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சந்தியா ரே எம்.பி, தெலுங்கானாவை சேர்ந்த விஜயசாந்தி, மகாராஷ்டிராவை சேர்ந்த சித்ரா தாய் வாக் , கர்நாடகா கீதா விவேகானந்தா ஆகியோர் அடங்கிய குழுவை, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அமைத்தார். இந்தக்குழுவினர் அரியலூர் மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக அவர்களது வீட்டில் இன்று நேரில் விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில், தெலக்கானா முன்னாள் எம்.பி.யும், நடிகையுமான விஜயசாந்தி கூறியதாவது, “மாணவி தற்கொலை மிகவும் வருத்மளிக்கிறது. மதத்தை மாற்றக் கோரி யாரையும் கட்டாயப்படுத்த கூடாது. ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலே மதம்மாற சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கடைசி வரை மாணவி மதம் மாறமாட்டேன் என இருந்துள்ளார். இந்த விவகாரத்தில் பா.ஜ.க. மதத்தை வைத்து ஓட்டு வாங்க எந்த அவசியமும் இல்லை. மாணவி இறப்பதற்கு முன்பு பேசிய வீடியோவை தமிழ்நாடே பார்த்துள்ளது.

மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதால் தான் அந்த மாணவி இறந்துள்ளார். மாணவிக்கு நடந்த இந்தச் சம்பவம் நாளை யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். ஏன் முதல்வர் இந்த விவகாரம் குறித்து பேசவில்லை முதல்வர் ஏன் மவுனமாக உள்ளார். இந்துக்கள் ஓட்டு வேண்டாமா?. மாணவி இறப்புக்கு மதமாற்ற காரணம் இல்லை என திசை திருப்புகின்றனர். இந்தச் சம்பவம் நாளை யாருக்கும் நடக்கக் கூடாது. மாணவி தற்கொலை குறித்து முதல்வர் பேசவே வில்லை” என குற்றம் சாட்டியுள்ளார். மேலும், “முதல்வர் யாரை காப்பாற்ற நினைக்கிறார் என்று தெரியவில்லை. வழக்கம்போல் தி.மு.க. மாறாமல் அப்படியே தான் உள்ளது. மாணவிக்கு நியாயம் ஏன் தரவில்லை. இறந்த மாணவியின் தந்தை 25 ஆண்டுகளாக தி.மு.க.வின் தொண்டர். ஆனால், அவருக்கே அந்தக் கட்சியில் நியாயம் இல்லை.

ஏன் மாதமாற கட்டாயப்படுத்துகின்றனர். வீடியோவில் மாணவிதான் பேசியுள்ளார். இந்த விவகாரத்தை பெரிதாக்குவதால் பா.ஜ.கவிற்கு ஒன்றும் இல்லை. இங்கு பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா?. பா.ஜ.க. யாரையும் தூண்டி விடவில்லை. மாணவி குடும்பத்திற்கு அரசு ஒரு கோடி தரவேண்டும். மாணவி விவகாரத்தில் அரசியல் யாரும் பண்ணவில்லை. மாணவி பேசிய வீடியோ பொய்யா? குற்றவாளிக்கு தண்டனை கிடைக்க வேண்டும். ஆளும் கட்சியினர் இந்தப் பிரச்சனையை தோளில் போட்டுத் தீர்வு காணவேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.