தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட முடியாது - உயர்நீதிமன்றம்

webteam

பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த மே மாதம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். 

இதனையடுத்து சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தியதாகக் கூறி, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், பல்வேறு நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு அனுமதி அளித்தது.

இதையடுத்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது. இதில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்தது. அத்துடன் இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு வேதாந்தா நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

அதன்படி இந்த மார்ச் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மனுத்தாக்கல் செய்தது. அதில்,ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பின்னர் சுற்றுச்சூழல், குடிநீர் தரம் உயர்ந்துள்ளதா என ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.