தமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு: காங்கிரஸ் செயல் தலைவருக்கு சிபிசிஐடி சம்மன்

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு: காங்கிரஸ் செயல் தலைவருக்கு சிபிசிஐடி சம்மன்

webteam

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு தொடர்பாக தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சிபிசிஐடி காவல் துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர்.

பொள்ளாச்சியில் இளம்பெண்களை ஃபேஸ்புக் மூலம் ஏமாற்றி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி அதை வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது கொடூர சம்பவம் தொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரி ராஜன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் உள்ளனர். இச்சம்பவத்தில் பொள்ளாச்சியில் உள்ள அரசியல் பிரமுகர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், இதனால் காவல்துறை முழுமையான விசாரணை செய்யவில்லை என்றும் புகார் எழுந்தது. இதன் காரணமாக இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. 

இதற்கிடையே பொள்ளாச்சி பாலியல் கொடூர விவகாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக இன்னும் தமிழகத்தில் போராட்டங்கள் நிகழ்ந்து வருகின்றன. பல்வேறு அமைப்பினரும் இந்தக் கொடூரத்தை எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் முக்கிய கோரிக்கை, வழக்கை உடனே சிபிஐ விசாரிக்க வேண்டும் என்பதே. இந்த வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்களும் நடந்து வருகிறது. முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசின் வீடு மற்றும் பண்ணை வீட்டில் ஆகிய இடங்களில் சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்து செல்போன் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது. பின்னர் அவரது உறவினர்களிடம் விசாரணை மேற்கொள்ளபட்டது. 

இந்த நிலையில் பொள்ளாச்சி பாலியல் கொடூர விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சிபிசிஐடி காவல் துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர். பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக கூறப்படும் தினத்தில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு, மயூரா ஜெயக்குமாரை சந்திக்க சென்றாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் மயூரா ஜெயக்குமாருக்கு சிபிசிஐடி காவல்துறை சம்மன் அனுப்பி உள்ளது. மேலும் 

மயூரா ஜெயக்குமார் வருகிற 25 ஆம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகும்படியும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.