தமிழ்நாடு

நாமக்கல் மாவட்டத்தில் 30 குழந்தைகள் விற்பனை ! : சிபிசிஐடி அதிர்ச்சி தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் 30 குழந்தைகள் விற்பனை ! : சிபிசிஐடி அதிர்ச்சி தகவல்

webteam

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை முப்பது குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக சிபிசிஐடி காவல்துறையினர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் குழந்தைகள் விற்பனை தொடர்பான விவகாரம் வெளியாகி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக ஆய்வு நடத்த மாவட்ட சுகாதாரத்துறைக்கு ஆட்சியர் ஆசியா மரியம் உத்தரவிட்டு இருந்தார். இதையடுத்து நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் 25 குழுக்கள் அமைக்கப்பட்டு, கொல்லிமலை உள்ளிட்ட பல பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நாமக்கல் மாவட்டத்தில் பிறந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் விவரங்களும், அக்குழந்தைகளின் பெற்றோரின் முகவரியும், அக்குழந்தை தற்போது பெற்றோரிடம் உள்ளதா? அல்லது யாரிடம் உள்ளது? என்பன உள்ளிட்ட விவரங்களும் சேகரிக்கப்பட்டன. ஆய்வு முடிவுற்ற பின், அதன் அறிக்கையை மாவட்ட சுகாதாரத்துறை சிபிசிஐடி போலிசாரிடம் வழங்கி உள்ளது. 

அதில், நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை, 24 பெண் குழந்தைகள் உள்பட 30 குழந்தைகள் விற்கப்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக, சிபிசிஐடியினர் தெரிவித்து உள்ளனர். குழந்தைகளை விற்ற பெற்றோர், அதனை வாங்கி வளர்த்து வரும் பெற்றோர்கள் மற்றும் இவர்களுக்கு இடையே தரகர்களாக செயல்பட்டோரையும் கண்டறிந்து விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, குழந்தை விற்பனை தொடர்பாக கைது செய்யப்பட்ட சேலம் சர்கார் கொல்லப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர் சாந்தி, பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இதுவரை, பத்து குழந்தைகளை விற்பனை செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விஸ்வரூபம் எடுத்துள்ள குழந்தை விற்பனை தொடர்பான வழக்கில், இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.