கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி இறந்த விவகாரத்தில் நீதி கேட்டு கடந்த 5 நாட்களாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை நடைபெற்ற மறியல் போராட்டத்தை காவல்துறையினர் கலைக்க முயன்றனர்.
அப்போது போராட்டம் வன்முறையாக மாறியது. இவ்வழக்கு தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், இன்று நிகழ்ந்த வன்முறைக்கு மாணவர் சங்கம் காரணம் அல்ல என்று பெரம்பலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அம்மாணவியின் தாயார் பேட்டி அளித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “வன்முறைக்கு மாணவர் சங்கம் காரணமல்ல. அந்த பள்ளிக்கு முன்பகையாளர்களோ அல்லது பள்ளி நிர்வாகமே ஏற்பாடு செய்து வைத்திருந்த ஆட்களோ வன்முறைக்கு காரணமாக இருக்கலாம். என் மகள் உயிரிழந்தது பற்றிய விசயங்கள் எனக்கு தெரிந்து இன்னும் வெளியில் வரவில்லை. என் மகள் இறப்புக்கு நீதி கிடைக்குமா? கிடைக்காதா? என்று கடவுளுக்குத்தான் தெரியும்” என்று தெரிவித்தார்.