தமிழ்நாடு

லஞ்சம் கொடுக்காத பெண்ணை மருத்துவமனை ஊழியர் கீழே தள்ளிய விவகாரம்: மனித உரிமை ஆணையம் வழக்கு

லஞ்சம் கொடுக்காத பெண்ணை மருத்துவமனை ஊழியர் கீழே தள்ளிய விவகாரம்: மனித உரிமை ஆணையம் வழக்கு

kaleelrahman

ஆண் குழந்தை பிறந்ததற்கு லஞ்சம் கொடுக்காத பெண்ணை அரசு மருத்துவமனை ஊழியர் சக்கர நாற்காலியிலிருந்து கீழே தள்ளிய விவகாரத்தை மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்துள்ளது.

நாகை மாவட்டம் திட்டச்சேரியைச் சேர்ந்த முருகவள்ளி என்பவர் ஏப்ரல் 19ஆம் தேதி நாகை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில், ஆண் குழந்தை பிறந்திருப்பதால் முருகவள்ளியிடம், உமா என்ற அரசு மருத்துவமனை ஊழியர் பணம் கேட்டுள்ளார். முருகவள்ளி பணம் தர மறுத்ததால், உமா, முருகவள்ளி அமர்ந்திருந்த சக்கர நாற்காலி வண்டியை அலட்சியமாக தள்ளியதில், முருகவள்ளி நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதை அங்கிருந்த பொதுமக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், நாளிதழிலும் செய்தி வெளியானது.

இந்த செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. ஆணைய உறுப்பினர் துரை ஜெயச்சந்திரன் எடுத்துள்ள வழக்கில், இந்த சம்பவம் குறித்து, தமிழ்நாடு மருத்துவ பணிகள் துறை இயக்குனரும், நாகை மாவட்ட இணை இயக்குனரும் இரண்டு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.