பொள்ளாச்சி இளம் பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த கும்பலின் பின்புலத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள ஒரு கும்பல், பெண்களிடம் நட்பாக பழகி ஆபாச வீடியே எடுத்து, பின்பு மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வருவதாகவும், சம்பந்தப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாரிடம் வீடியோவைக் காட்டி பணம் மற்றும் நகை பறித்து வருவதாகவும் காவல்துறைக்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளது. மேலும் இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குடும்பத்தினர் நேரடியாக புகார் கொடுக்க முன்வராததால், காவல்துறை அதிகாரிகள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இந்தச் சூழலில் இதே பாணியை பயன்படுத்தி பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியை இந்தக் கும்பலை சேர்ந்தவர்கள் நட்பாக பழகி, தனியே வரவழைத்து ஆபாச வீடியே எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளது. அவரிடமிருந்து 1 சவரன் நகையையும் பறித்தது. பின்னர் மீண்டும் மீண்டும் அவரிடம் பணம் கேட்டு தெந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அந்த மாணவி இந்தப் பிரச்சனை குறித்து தனது அண்ணன் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து கடந்த 25-ஆம் தேதியன்று பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது உறவினர்கள் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அந்தப் புகாரின் அடிப்படையில் பொள்ளாச்சி ஜோதிநகர் பகுதியைச் சேர்ந்த சபரிராஜன், சதீஸ், வசந்தகுமார் ஆகிய மூவரை கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசு தலைமறைவானார். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இந்தக் கும்பல் பொள்ளாச்சியில் கடந்த பல ஆண்டுளாக மாணவிகள் மற்றும் குடும்ப பெண்களின் தொலைபேசி எண்களை திரட்டி, அவர்களிடம் நட்பாக பழகி, அவர்களை தனிமையில் அழைத்துச் சென்று ஆபாச வீடியோ எடுத்து அவர்களை மிரட்டி, அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து பின்னர், அழைக்கும் போதெல்லாம் அவர்களை இச்சைக்கு பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது.
மேலும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில், 50க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் தலைமறைவான திருநாவுகரசை பிடிக்க காவல்துறை இரண்டு தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்தச் சூழலில் தலைமறைவாக இருந்த திருநாவுக்கரசு,“எனக்கு இந்தப் பாலியல் பிரச்னைக்கு எந்தச் சம்பந்தம் இல்லை; இதில் முக்கிய பிரமுகர் உள்ளார்கள்” என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார். மேலும் பொள்ளாச்சியில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் காவல்துறையை கண்டித்தும் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரியும் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரக் கோரியும் போராட்டங்கள் நடத்தினர்.
இதனைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த திருநாவுக்கரசுவை பொள்ளாச்சியை அடுத்த மாகினாம்பட்டி பகுதியில் தனிப்படை போலிசார் கைது செய்தனர். மேலும் பொள்ளாச்சியைச் சேர்ந்த செந்தில், வசந்குமார், பாபு, நாகராஜ் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் திருநாவுக்கரசிடம் விசாரனை நடத்தி தனிப்படை போலீசார், கல்லூரி காலத்தில் இருந்தே பெண்களிடம் நட்பாக பழகி, தான் வைத்திருக்கும் பணம் பலத்தை வைத்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்தது. மேலும் கல்லூரி மாணவிகளை தனது இச்சைக்கு பயன்படுத்திய பிறகு தனது நண்பர்களுக்கு அதனை அனுபவிக்க உதவியதும் தெரியவந்தது. அப்படி இச்சைக்கு பயன்படுத்தும் பெண்களை ரகசிய வீடியோ எடுத்து அவர்களிடம் பணம், நகை மற்றும் பாலியல் தொல்லையிலும் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து தனிப்படை போலீசார் திருநாவுகரசை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். முன்னதாக கைது செய்யப்பட்ட சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய மூவரையும் போலீசார் பொள்ளாச்சி குற்றவியல் நீதிமன்றதில் ஆஜர்படுத்தி போது மூவரையும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்தக் கும்பலால் மேலும் பல இளம்பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பல வருடங்களாக இந்தக் கும்பல் பெண்களை காதல் செய்வதாக ஆசைவார்த்தை காட்டி, பின் பாலியல் தொல்லைகொடுத்து மிரட்டியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே பொள்ளாச்சி பகுதியில் ஏதேனும் பெண்கள், இக்கும்பலால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டிருந்தால் தைரியமாக புகார் கொடுக்கலாம் என போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த வழக்கு சம்பந்தமாக பொள்ளாச்சி பகுதியில் பாதிக்கப்பட பெண்கள் புகார் அளிக்க முன்வர வேண்டும் அப்படி அளிக்கும் பட்சத்தில் அவர்களது விபரங்கள் பாதுகாக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்கும் பட்சத்தில் அவர்களுக்காக வாதடி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வாங்கி தரப்படும் என்றும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே தன்னை நம்பி வந்த ஒரு இளம்பெண்ணை, இந்தக் கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுப்பது போன்ற ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதனையடுத்து இந்தக் குற்றவாளிகளை கைது செய்து அதிகபட்ச தண்டனை கொடுத்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென்பதே பலரின் கருத்தாக உள்ளது.