சென்னை பல்லாவரம் அருகே வாகன நிறுத்தம் தொடர்பான பிரச்னையில் திமுக பிரமுகரின் கார் கண்ணாடி அடித்து உடைக்கப்பட்டது.
சென்னை பல்லாவரம் அடுத்த, பொழிச்சலூர், பாலாஜி நகரை சேர்ந்தவர் வெங்கடஷ். இவர் பம்மல் நகர திமுக மாணவரணி அமைப்பாளராக உள்ளார். இவரது காரை வீட்டிற்கு வெளியில் சாலையில் நிறுத்துவது வழக்கம். அவ்வாறு நிறுத்தப்பட்ட காரினால், சாலையில் மற்ற வாகனங்கள் செல்ல வழி இல்லாமல் வாகன ஓட்டிகள் ஒலி எழுப்பியுள்ளனர். இதனால் வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றுள்ளது.
இதனையடுத்து காரில் இருந்து இறங்கிச் சென்று, திமுக பிரமுகரின் வீட்டின் கதவை தட்டி சாலையில் நிறுத்தியிருக்கும் காரை எடுத்து வழிவிடும்படி கூறியுள்ளனர். பெயருக்கு காரை எடுத்து விடுவதுபோல் நகர்த்தி விட்டு மீண்டும் அங்கேயே நிறுத்தி விட்டதால் வாகனங்கள் செல்ல முடியவில்லை.
இதனால் காரில் வந்த வெங்கட்ராமன் என்பவருக்கும் திமுக பிரமுகருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட அப்பகுதியில் வசிக்கும் அதிமுக பிரமுகர் ரவி என்பவர், வாகனத்தை ஓரமாக விட முடியாதா? ‘ஏன் வீண் பிரச்சனை செய்கிறாய்?' எனக் கேட்க திமுக பிரமுகர் வெங்கடேஷ், ரவியை பிடித்து கீழே தள்ளிவிட்டுள்ளார்.
உடனே ரவியின் ஆதரவாளர்கள் சிலர் வந்து திமுக பிரமுகரின் கார் கண்ணாடியை அடித்து நொறுக்கியுள்ளனர். அப்போது ஏற்பட்ட பிரச்னையில் வெங்கடேஷ்க்கு இடுப்பு, தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் லேசான சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டது. இது தொடர்பாக திமுக பிரமுகர் கொடுத்த புகாரின் பேரில் சங்கர் நகர் போலீசார் பாலாஜி நகரை சேர்ந்த பழனி, என்பவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ளவர்களையும் தேடி வருகின்றனர்.