தமிழ்நாடு

காதல் தம்பதியை சினிமா பாணியில் காரில் துரத்திய உறவினர்கள்

காதல் தம்பதியை சினிமா பாணியில் காரில் துரத்திய உறவினர்கள்

webteam

கிருஷ்ணகிரி அருகே சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதியை பெண்ணின் உறவினர்கள் காரில் துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் கருவாணூரைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் வெங்கடதாம்பட்டியைச் சேர்ந்த சுகன்யா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 16ஆம் தேதி கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து சுகன்யாவை அவரது உறவினர்கள் தேடி வந்ததாக தெரிகிறது. திருமணத்தை பதிவு செய்ய தம்பதி போச்சம்பள்ளி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வருவதாக சுகன்யாவின் உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது.

இந்நிலையில் பனங்காட்டூரில் இருந்து போச்சம்பள்ளிக்கு சிவக்குமார் - சுகன்யா இருவரும் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தம்பதி சென்ற காரை மற்றொரு கார் துரத்தியது. அதிலிருந்தவர்கள் சுகன்யாவின் உறவினர்கள். அவர்களிடம் இருந்து‌ தப்ப தம்பதியின் கார் சாலையில் சீற, எப்படியும் பிடித்து விட வேண்டும் என்று சுகன்யாவின் உறவினர்கள் விரட்ட சினிமாவை மிஞ்சும் வகையில் சாலையில் வாகனங்களின் விரட்டல் சம்பவம் நடந்தேறியது. 

இதனைதொடர்ந்து தருமபுரி சாலையில் சென்ற போது சுகன்யா உறவினர்களின் கார், தம்பதி சென்ற காரை இடது பக்கம் தள்ளியது. வேறு வழியின்றி இடதுபக்கம் திரும்பிய தம்பதியின் கார் அங்கிருந்த வளாகம் ஒன்றிற்குள் நுழைந்தது. நல்வாய்ப்பாக அது காவல்நிலைய வளாகம். தம்பதி கார் காவல் நிலையத்திற்குள் நுழைந்ததை பார்த்த சுகன்யாவின் உறவினர்கள் அங்கேயே நின்றுவிட்டனர்.

சிவக்குமாரும் சுகன்யாவும் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய ஆய்வாளர் கமலேஷ் இருவரையும் காவல்துறை பாதுகாப்புடன் அனுப்பி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் சூடுகொண்டப்பள்ளியைச் சேர்ந்த நந்தீஷ் சுவாதி தம்பதி ஆணவக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி நீங்குவதற்குள் அதே மாவட்டத்தில் நடந்திருக்கும் மற்றொரு நிகழ்வு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.